சாலை விதியை மீறியதால் ஆத்திரம் - கார் கண்ணாடியை உடைத்த டிராபிக் போலீஸ்

சிவப்பு விளக்கு எரியும்போது சாலையை கடந்ததால் டிராபிக் போலீஸ் கார் கண்ணாடியை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2022-05-18 22:07 GMT

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டம் ராம்பாக் நகரில் உள்ள டான்க் ரோடு எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். இதனால், அந்த ரோட்டில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம்.

இந்நிலையில், டான்க் ரோட்டில் நேற்று சிவப்பு விளக்கு எரியும்போது சாலை விதியை மீறி ஒரு கார் சாலையை கடக்க முற்பட்டது. அப்போது அங்கு பணியில் இருந்த டிராபிக் போலீஸ் அந்த காரை இடைமறித்தார்.

அப்போது, கார் நிற்காததால் தன் கையில் வைத்திருந்த லத்தியால் டிராபிக் போலீஸ் கார் மீது தாக்கினார். இதில், காரின் முன்புற கண்ணாடி உடைந்தது. இதனால், காரை ஓட்டி வந்த சத்தியநாராயண் சைனி மற்றும் காருக்குள் இருந்த அவரது குடும்பத்தினரான ஒரு பெண் மற்றும் ஒரு சிறுமி அதிர்ச்சியடைந்தனர்.

இதனை தொடர்ந்து காரில் இருந்து கிழே இறங்கிய சைனி டிராபிக் போலீசிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் தனது நண்பர்களுக்கும் சம்பவம் குறித்து சைனி தகவல் கொடுத்தார்.

இதனையடுத்து, அங்கு வந்த சைனியின் நண்பர்களும் டிராபிக் போலீசிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக டிராபிக் போலீஸ் அளித்த புகாரின் அடிப்படையில் 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்