கோலாரில் விலை குறைவால் வீதியில் கொட்டப்படும் தக்காளிகள்

கோலாரில் விலை வீழ்ச்சியால் தக்காளியை விவசாயிகள் வீதியில் கொட்டி தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் இழப்பீடு தொகை வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Update: 2023-09-06 22:12 GMT

கோலார் தங்கவயல்:-

தக்காளி விற்பனை

ஆசியாவிலேயே மிகப்பெரியது கோலாரில் அமைந்துள்ள ஏ.பி.எம்.சி. தக்காளி மார்க்கெட். இந்த மார்க்கெட்டில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் தக்காளி விலை தங்கத்திற்கு இணையாக விற்பனை செய்யப்பட்டது. அதாவது 15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.2700 வரை விற்பனையானது. ஒரு கிலோ தக்காளி ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனையானது. பின்னர் ஆகஸ்டு மாதங்களில் தக்காளி வரத்து அதிகரித்து.

மேலும் வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி வாங்குவதற்கு வரும் வியாபாரிகளின் வரத்தும் குறைந்தது.இதனால் தக்காளி விற்பனை நாளுக்கு நாள் குறைய தொடங்கியது. ஆகஸ்டு மாதம் இறுதியில் 15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.600 முதல் ரூ.700 வரை விற்பனை செய்யப்பட்டது. அப்போது ஒரு கிலோ தக்காளி ரூ.50-க்கு விற்பனையானது. இதையடுத்து தக்காளி வரத்து ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டிற்கு அதிகரித்துள்ளது.

வீதியில் கொட்டப்படும் தக்காளி

இதனால் கடந்த 10 நாட்களாக தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதன்படி கடந்த 2 நாட்களாக ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டில் 15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஒரு கிலோ தக்காளி ரூ.3-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை குறைவால் விவசாயிகள் பெரும் அதிருப்தியடைந்துள்ளனர். மேலும் விளைச்சல் அதிகரித்தாலும், விலை குறைந்ததால் சரியான லாபம் கிடைக்கவில்லை என்று தக்காளியை விளை நிலத்திலேயே கொட்டி நாசப்படுத்தி வருகின்றனர்.

அதேபோல கடந்த 2 நாட்களாக கோலார் மார்க்கெட்டிற்கு வரும் தக்காளிகளை விவசாயிகள் அங்கேயே கொட்டிவிட்டு செல்கின்றனர். இந்த விலை குறைவால் கோலார் தக்காளி மார்க்கெட் வெறிச்சோடி காணப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரம் தொடர் விலை வீழ்ச்சியால் மன வேதனை அடைந்துள்ள விவசாயிகள் சரியான இழப்பீடு வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்