நெஞ்சுவலியால் அவதிப்பட்ட போலீஸ்காரரை காப்பாற்ற சாகரில் இருந்து சிவமொக்காவுக்கு 45 நிமிடங்களில் சென்ற ஆம்புலன்ஸ்

நெஞ்சுவலியால் அவதிப்பட்ட போலீஸ்காரரை காப்பாற்ற சாகரில் இருந்து சிவமொக்காவுக்கு 45 நிமிடங்களில் சென்ற ஆம்புலன்ஸ் சென்றது.

Update: 2023-05-23 18:45 GMT

சிவமொக்கா-

சிவமொக்கா மாவட்டம் சாகர் புறநகர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருபவர் ஹேமந்த் (வயது 54). அவர் காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஹேமந்த் பணி முடிந்து வீட்டுக்கு வந்து தூங்கி கொண்டு இருந்தார். இந்தநிலையில் அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் ஹேமந்தை மீட்டு சிகிச்சைக்காக சாகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை மேல் சிகிச்சைக்காக சிவமொக்காவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு 1 மணி நேரத்தில் கொண்டு செல்லும்படி டாக்டர் கூறினார்.

இதையடுத்து அவரது குடும்பத்தினர் 'ஜீரோ போக்குவரத்து' வசதி வழங்கும்படி சாகர் போலீசாரிடம் கூறினர். இதையடுத்து போலீசார் ஹேமந்த் ஆம்புலன்சில் சிகிச்சைக்கு செல்ல 'ஜீரோ போக்குவத்து' வசதியை ஏற்படுத்தி கொடுத்தனர். ேமலும் சாகரில் இருந்து சிவமொக்கா வரை தடையின்றி செல்ல அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து ஹேமந்த், ஆம்புலன்சில் சிவமொக்காவுக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆம்புலன்சை அப்துல் சுகுர் என்பவர் ஓட்டினார். ஆம்புலன்ஸ் முன் பின் போலீஸ் வாகனங்கள் சென்றது. அதில் சைரன் ஒலி எழுப்பட்டு சென்றது. சாகரில் இருந்து சிவமொக்கா தனியார் ஆஸ்பத்திரிக்கு சுமார் 45 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் சென்றடைந்தது. அங்கு ஹேமந்த்துக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவர் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஜீரோ போக்குவரத்து வசதி ஏற்படுத்தி கொடுத்து ஹேமந்தின் உயிரை காப்பாற்றிய போலீசாருக்கும், ஆம்புலன்ஸ் டிரைவருக்கும் அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்