நேதாஜிக்கு ஆர்.எஸ்.எஸ். விழா எடுக்க நேதாஜியின் மகள் எதிர்ப்பு

கொல்கத்தாவில் நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு ஆர்.எஸ்.எஸ். விழா எடுக்க நேதாஜியின் மகள் அனிதா போஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Update: 2023-01-21 17:38 GMT

நேதாஜிக்கு ஆர்.எஸ்.எஸ். விழா

நாட்டின் மாபெரும் சுதந்திர போராட்ட வீரராக திகழ்ந்தவர் சுபாஷ் சந்திர போஸ். நாளை மறுநாள் (23-ந் தேதி) அவரது பிறந்த நாளையொட்டி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அவருக்கு விழா எடுக்கிறது.

மேற்கு வங்காள மாநிலம், கொல்கத்தாவில் உள்ள சாகித் மினார் மைதானத்தில் நடக்கிற விழாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசுகிறார்.

அனிதா போஸ் கருத்து

இதையொட்டி, ஜெர்மனியில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மகள் அனிதா போஸ், தொலைபேசி வழியாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது:-

அனைத்து மதங்களும் மதிக்கப்பட வேண்டும் என்ற நேதாஜியின் போதனையை ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பா.ஜ.க.வும் பிரதிபலிக்கவில்லை. நேதாஜி பக்தியான இந்துவாக இருந்தபோதும், பிற மதங்களை மதிக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தார். பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் மத்தியில் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்புக்கு அவர் ஆதரவாக இருந்தார்.

இரு துருவங்கள்

ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பா.ஜ.க.வும் இந்த அணுகுமுறையை பிரதிபலிக்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் இரு தரப்பிலும் ஒரு எளிய முத்திரையை வைக்க விரும்பினால், அவர்கள் வலதுசாரிகள்; நேதாஜி ஒரு இடதுசாரி.

ஆர்.எஸ்.எஸ். கொள்கையைப் பொறுத்தமட்டில் நான் கேட்டதில் இருந்து, அதுவும் நேதாஜியின் கொள்கையும் இரு துருவங்கள் மாதிரி. இரு கொள்கை மதிப்புகளும் ஒத்துபோகாது. நேதாஜியின் கொள்கைகளையும், லட்சியங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பா.ஜ.க. விரும்பினால், அது நிச்சயம் நல்லதுதான். நேதாஜியின் பிறந்த நாளை பல தரப்பினரும் பல்வேறு விதமாக கொண்டாட விரும்புகின்றனர். அவர்களில் பலரும் அவரது கருத்துகள் மற்றும் கொள்கைகளுடன் உடன்படுகிறார்கள்.

'அவர்களின் நலன் நிறைவேறுகிறது'

நேதாஜியை கவுரவிக்க மத்திய பா.ஜ.க. அரசு பல முயற்சிகளை எடுத்துள்ளது. எந்தவொரு அரசியல்வாதியாக இருந்தாலும், முதலில் அவர்களை அவரது நலன்களைப் பார்க்க அனுமதிக்க வேண்டும். நேதாஜி இன்று உயிருடன் இருந்திருந்தால், அவர் மத்திய அரசின் மீதான பார்வையில் இருந்து மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தால், பா.ஜ.க. அவரை கவுரவித்திருக்காது. எனவே (இந்த விஷயத்தில்) அவர்களின் நலன்தான் நிறைவேறுகிறது.

சித்தாந்தம் என்று பார்த்தால், நாட்டில் உள்ள வேறு எந்தக்கட்சியையும் விட காங்கிரஸ் கட்சிக்குத்தான் நேதாஜியுடன் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்