மந்திரி ஆர்.அசோக்கிற்கு எதிராக டி.கே.சுரேஷ் போட்டி?

வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக்கிற்கு எதிராக பத்மநாபநகர் தொகுதியில் டி.கே.சுரேசை களம் நிறுத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2023-04-18 18:45 GMT

பெங்களூரு:-

தோற்கடிக்க வேண்டும்

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மனுக்களை தாக்கல் செய்ய நாளை(வியாழக்கிழமை) கடைசி நாள் ஆகும். இதில் ஆளும் பா.ஜனதா உள்பட முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மனுக்களை தாக்கல் செய்து வருகிறார்கள். பா.ஜனதா சார்பில் வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பத்மநாபநகர் மற்றும் கனகபுரா ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

கனகபுரா தொகுதியில் அவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக அவர் மேற்கொண்ட ஊர்வலத்தில் பா.ஜனதாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதனால் பா.ஜனதா நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். கனகபுராவில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அங்கு பா.ஜனதா வலுவான வேட்பாளரை களம் நிறுத்தி இருக்கிறது.

டி.கே.சுரேஷ் போட்டி

இதற்கு பதிலடி கொடுக்க டி.கே.சிவக்குமார் வியூகம் வகுத்துள்ளார். பத்மநாபநகர் தொகுதியில் மந்திரி ஆர்.அசோக்கிற்கு எதிராக ரகுநாத் நாயுடு என்பவருக்கு காங்கிரஸ் டிக்கெட் வழங்கியது. அவருக்கு பி பாரமும் வழங்கப்பட்டது. ஆனால் டி.கே.சிவக்குமார், அவரை மனு தாக்கல் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார். இதனால் மந்திரி ஆர்.அசோக்கை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவருக்கு எதிராக தனது சகோதரர் டி.கே.சுரேஷ் எம்.பி.யை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர் இன்றோ, நாளையோ மனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பத்மநாபநகரில் ஒக்கலிகர் சமூக மக்கள் அதிகமாக இருக்கிறார்கள். குறிப்பிடத்தக்க அளவுக்கு நாயுடு சமூகத்தினரும் உள்ளனர். இந்த வாக்குகளை மையமாக வைத்து செயல்பட காங்கிரஸ் வியூகம் வகுத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்