மராட்டியத்தில் இருந்து ஆயிரக்கணக்கில் பெண்கள், சிறுமிகள் மாயம்; அதிர்ச்சி தரும் காரணம்...
மராட்டியத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 1,100 பெண்களை காணவில்லை என போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
புனே,
மராட்டியத்தின் மும்பை நகரில் சமீபத்தில் போலீசாருக்கு புகார் ஒன்று வந்துள்ளது. இதன்படி, பந்தூப் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர் தெரிவித்து உள்ளனர்.
இதுபற்றி விசாரணை நடத்தியதில், சிறுமியை அவுரங்காபாத் நகரில் இருந்து போலீசார் மீட்டனர். தொடர் விசாரணையில், கடத்தல்காரர்கள் அந்த சிறுமியை பாவாராம் மாலி என்பவரிடம் விற்றுள்ளனர்.
ராஜஸ்தானின் ஜலோர் நகரை சேர்ந்த 50 வயதுடைய அவர், 17 வயது சிறுமியை திருமணம் செய்வதற்காக விலைக்கு வாங்கியுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்து உள்ளது.
தொடர்ந்து விசாரித்ததில், இதுபோன்று ராஜஸ்தானுக்கு சிறுமிகள் பலரை கடத்தி, கட்டாய திருமணம் செய்வது தெரிய வந்தது.
ராஜஸ்தான், குஜராத் மற்றும் அரியானாவில் பெண் பாலின விகிதம் குறைவாக உள்ளது. ஆண் விகிதமுடன் ஒப்பிடும்போது, குறைந்த அளவிலான பெண்களே மாநிலங்களில் உள்ளனர்.
இதனால், அவர்கள் மராட்டியத்தில் இருந்து சிறுமிகளை கடத்தி செல்கின்றனர். கடந்த 2022-ம் ஆண்டில் சிறுமிகளை காணவில்லை என பதிவு செய்யப்பட்ட புகார்களின் எண்ணிக்கை 1,164 என மும்பை போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இவற்றில் மொத்தம் 1,047 வழக்குகளை போலீசார் விசாரித்து உள்ளனர். 2021-ம் ஆண்டில் மொத்தம் 1,103 கடத்தல் வழக்குகள் பதிவாகி உள்ளன. அவற்றில் 949 வழக்குகளை போலீசார் விசாரணை நடத்தி முடித்து உள்ளனர்.
2020-ம் ஆண்டில் மொத்த கடத்தல் வழக்குகள் எண்ணிக்கை 779 ஆகும். அவற்றில் 678 குற்ற சம்பவங்கள் விசாரிக்கப்பட்டு உள்ளன.
இந்த அதிர்ச்சி தரும் கடத்தல் பற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, வறுமையை பயன்படுத்தி இந்த பெண்கள் 1 முதல் 2 லட்சத்திற்கு ஏலம் விடப்படுகின்றனர். அவர்களை பணம் தருகிறோம் என்று கூறியோ அல்லது கடத்தியோ சென்று விடுகின்றனர் என கூறியுள்ளார்.
தேசிய குற்ற ஆவண பதிவுகள் வாரியம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை ஒன்றின்படி, 2020 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே மும்பையில் பெண் கடத்தல்கள் அதிகரித்து உள்ளன. 2021-ம் ஆண்டில் திருமண நோக்கத்திற்காக கடத்தப்பட்ட மொத்தம் 418 பெண்களில் 363 பேர் சிறுமிகள் ஆவர் என தெரிவித்து உள்ளது.
இந்த கடத்தல்களுக்கு அடிப்படையாக ராஜஸ்தான், குஜராத் மற்றும் அரியானாவில் பெண் பாலின விகிதம் குறைவாக உள்ளது என பொதுவாக கூறப்படுகிறது. எனினும், சில ஆண்டுகளுக்கு முன்பு தேசிய சுகாதார தரவின்படி, பணக்கார மாநிலங்களில் ஏழ்மையான மாநிலங்களை விட குறைவான பெண் பாலின விகிதம் உள்ளது தெரிய வந்தது. வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவிலும் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து காணப்பட்டது.
இந்தியாவின் டாப் 10 பணக்கார நாடுகளில் இடம் பெற்ற அரியானா, உத்தரகாண்ட் மற்றும் குஜராத்தில் குறைவான பெண் குழந்தைகள் பிறந்து உள்ளனர். ஆயிரம் சிறுவர்களுக்கு இணையான சிறுமிகளின் பிறப்பு எண்ணிக்கையானது, 7 மாநிலங்களில் இந்திய சராசரியை விட குறைவாக உள்ளது. பணக்கார மற்றும் கல்வியறிவு பெற்ற மாநிலங்களில் இந்த பாலின விகித வேறுபாடு அதிகரித்து காணப்படுகிறது.
கல்வியறிவு பெற்றவர்களிடையே, வருவாயும் அதிகரிக்கிறது. அதனால், அந்த குடும்பத்தினர் எளிதில் பாலினங்களை தேர்வு செய்யும் நடைமுறைகளை அணுகி அதன் பலனை பெற்று விடுகின்றனர் என அதுபற்றிய அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.
இதனால், இந்தியாவில் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு இணையான பெண் குழந்தைகளின் பாலின விகிதம் பல மாநிலங்களில் 900-க்கும் கீழ் சென்றுள்ளது என 2018-ம் ஆண்டு கணக்கிடப்பட்ட இந்திய அரசின் நிதி ஆயோக் அறிக்கை அதிர்ச்சி தெரிவிக்கின்றது.