பொதுமக்களிடம் சிக்காமல் இருக்க திடீரென மின்கம்பியில் தாவிய திருடன் - கேரளாவில் பரபரப்பு

கேரளாவில் பெண்ணின் நகையை பறிக்க முயன்ற இளைஞர் பொதுமக்களிடம் சிக்காமல் இருக்க மின் கம்பத்தில் ஏறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2022-10-30 12:07 GMT

காசர்கோடு,

கேரளாவில் பெண்ணின் நகையை பறிக்க முயன்ற இளைஞர் ஒருவர், பொதுமக்களிடம் சிக்காமல் இருக்க மின் கம்பத்தில் ஏறி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கேரளா மாநிலம் காசர்கோடு பகுதியில் பீகாரை சேர்ந்த இளைஞர் ஒருவர், அப்பகுதியை சேர்ந்த பெண்ணிடம் நகை பறிக்க முயன்றுள்ளார். இதையடுத்து, அந்த இளைஞரை அப்பகுதியினர் துரத்தியுள்ளனர். பொதுமக்களிடம் சிக்காமல் இருக்க அந்த இளைஞர் அருகில் இருந்த டிரான்ஸ்பார்மர் மேல் ஏறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர், மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவித்து, மின்சாரத்தை நிறுத்தினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் இளைஞரை கீழே இறக்க முயற்சித்தனர். ஆனால், அவர் கீழே இறங்க மறுத்து, மின் கம்பிகளில் தொங்கியவாறு போக்கு காட்டியுள்ளார்.

இதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள், ஒரு மணிநேரம் போராடி மின்கம்பியிலிருந்த இளைஞரை கீழே இறக்கினர். விசாரணையில் அந்த இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்ததை அடுத்து, போலீசார் அவரை மனநல காப்பாகத்தில் சேர்த்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்