திருட சென்ற இடத்தில் கதவின் இடையில் தலை சிக்கி உயிரிழந்த திருடன் - விசித்திர சம்பவம்

விசைத்தறி ஆலைக்குள் திருட சென்று இடத்தில் கதவின் இடையில் தலை சிக்கியதால் திருடன் உயிரிழந்தான்.

Update: 2022-11-28 08:09 GMT

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி மாவட்டம் தனியல்பூர் என்ற பகுதியில் நசீம் என்பவருக்கு சொந்தமான விசைத்தறி ஆலை உள்ளது.

போதிய வேலை இல்லாததால் இந்த விசைத்தறி ஆலை கடந்த 2 நாட்களாக செயல்படாமல் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில், விசைத்தறி ஆலையில் திருடும் நோக்கத்தோடு ஜாவித் (30 வயது) என்ற நபர் நேற்று இரவு ஆலைக்குள் நுழைய முயற்சித்துள்ளார்.

இரவு விசைத்தறி ஆலையின் முன்வாசல் கதவை பாதி திறந்து உள்ளே நுழைய முயற்சித்துள்ளார். ஜாவித் தனது தலையை உள்ளே நுழைத்து ஆலைக்குள் செல்ல முயற்சித்துள்ளார்.

அப்போது, அந்த கதவின் உள்பக்கமாக மேல் தாழ்பாள் போடப்பட்டுள்ளது. இதை அறியாமல் ஜாவித் உள்ளே நுழைய முயற்சித்ததால் அவரது தலை கதவின் உள்பக்கமும், உடல் கதவின் வெளிப்பக்கமும் சிக்கிக்கொண்டது.

இதனால், தலையை வெளியே எடுக்க முடியாமல் இருகதவுகளின் இடையே சிக்கிக்கொண்ட ஜாவித் கதவில் இருந்து விடுபட தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார். எவ்வளவுதான் முயன்றும் கதவுக்குள் இடையே சிக்கிய தலையை வெளியே எடுக்கமுடியவில்லை. இறுதியில் கதவுக்கு இடையே தலை மாட்டிக்கொண்டதால் கழுத்து பகுதியில் இறுக்கம் ஏற்பட்டு ஜாவித் மூச்சுத்திணறி விசைத்தறி வாசலிலேயே உயிரிழந்தார்.

இன்று காலை அப்பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்தபோது ஆலையின் வெளிப்பகம் உடல் பகுதியும், உள்பக்கம் தலை பகுதியும் சிக்கி நின்ற நிலையில் நபர் உயிரிழந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்த ஜாவிதின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்