சூடானில் இருந்து சிவமொக்கா வந்த 9 நரிக்குறவர்களுக்கு மலேரியா காய்ச்சல் பாதிப்பு

சூடானில் இருந்து சிவமொக்கா வந்த 9 நரிக்குறவர்களுக்கு மலேரியா காய்ச்சல் தொற்று இருப்பது உறுதியானது.

Update: 2023-06-07 18:45 GMT

சிவமொக்கா-

சூடானில் இருந்து சிவமொக்கா வந்த 9 நரிக்குறவர்களுக்கு மலேரியா காய்ச்சல் தொற்று இருப்பது உறுதியானதை தொடர்ந்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

9 நரிக்குறவர்களுக்கு மலேரியா காய்ச்சல்

கர்நாடகத்தில் பருவ மழைகாலம் தொடங்க இருக்கிறது. இந்த பருவ மழையையொட்டி மலேரியா, டெங்கு காய்ச்சல் குறித்து மக்களிடையே சுகாதாரத்துறை அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சிவமொக்கா மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக மலேரியா காய்ச்சல் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. முதற்கட்டமாக கடந்த மே மாதம் நடந்த தேர்தல் பாதுகாப்பு பணிக்காக சிவமொக்காவிற்கு வந்திருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த போலீஸ்காரர்கள் 4 பேருக்கு இந்த நோய் தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து வட நாட்டில் இருந்து கூலி வேலைக்கு வந்த 3 தொழிலாளிகளுக்கு மலேரியா காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதனால் உஷாரான சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு மலேரியா காய்ச்சல் குறித்த பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி கடந்த மாதம் இறுதியில் சூடான் நாட்டில் இருந்து வந்த நறிக்குறவர்கள் 9 பேருக்கு மலேரியா காய்ச்சல் இருப்பது உறுதியானது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

இவர்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்தால், சூடான் நாட்டில் இருந்து விமானம் மூலம் அழைத்துவரப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு மலேரியா காய்ச்சல் இருப்பது உறுதியானதால், நரிக்குறவர்கள் வசித்து வரும் பகுதிகள் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதாவது அவர்கள் வசித்து வரும் இடங்களில் மருந்துகள் தெளிப்பது, கொசு வலைகள் அமைப்பது ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான நடவடிக்கையில் சென்னபசப்பா எம்.எல்.ஏ. நேரடியாக இறங்கியுள்ளார்.

இது குறித்து சென்னபசப்பா எம்.எல்.ஏ. கூறியதாவது:-

மலேரியா காய்ச்சல் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் நோய். இந்த நோய் பரவாமல் தடுக்க மக்கள் தாங்கள் வசிக்கும் இடங்களை சுத்தமாக வைத்து கொள்ளவேண்டும். குறிப்பாக நரிக்குறவர் இன மக்கள் வசித்து வரும் இடங்களில் நோய் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டும். அவர்கள் வசிக்கும் இடங்களை தூய்மையாக வைத்திருப்பது சுகாதாரத்துறையின் பொறுப்பு. இதில் அலட்சியமாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்