பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியில் எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை நளின்குமார் கட்டீல் பேட்டி

மத்தியில் பிரதமர் தலைமையிலான 9 ஆண்டு கால ஆட்சியில் இதுவரை எந்தவிதமான ஊழல் குற்றச்சாட்டுகளும் இல்லை என்று மாநில பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் கூறியுள்ளார்.

Update: 2023-06-01 18:45 GMT

மங்களூரு-

மத்தியில் பிரதமர் தலைமையிலான 9 ஆண்டு கால ஆட்சியில் இதுவரை எந்தவிதமான ஊழல் குற்றச்சாட்டுகளும் இல்லை என்று மாநில பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் கூறியுள்ளார்.

9 ஆண்டு ஆட்சி

மங்களூருவில் பா.ஜனதா மாநில தலைவர் நளின் குமார் கட்டீல் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:-

இந்தியாவில் கடந்த 2014-ம் ஆண்டு மோடி தலைமையிலான பா.ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது. தற்போது 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த 9 ஆண்டு காலம் பிரதமர் மோடி சிறப்பாக ஆட்சி செய்துள்ளார். இதுவரை எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டும் பா.ஜனதா கட்சியின் மீது இல்லை. இந்த காலக்கட்டத்தில் நாடு வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. உலக நாடுகளுக்கே இந்தியா ஒரு முன் மாதிரியான நாடாக விளங்கி வருகிறது. குடும்ப அரசியலுக்கு பா.ஜனதா முற்றுப்புள்ளி வைத்து வருகிறது.

மேலும் காசி காரிடார், அயோத்தி, கேதார்நாத், யோகா தினம் ஆகியவை பா.ஜனதா அரசின் சாதனையாக விளங்கி வருகிறது. இதன் மூலம் இந்திய கலாசாரமும் காக்கப்படுகிறது. பயங்கரவாதத்தை ஒடுக்க சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்படுகிறது. காஷ்மீரை மீட்டதன் மூலம் தன்னம்பிக்கை கிடைத்துள்ளது. பல தேசிய நெடுஞ்சாலைகள், 4 வழிச்சாலைகள் பா.ஜனதா ஆட்சியில் மேம்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல விமான நிலையங்கள், மருத்துவ கல்லூரிகளை மத்திய அரசு கடந்த 9 ஆண்டுகளில் கொண்டு வந்துள்ளது.

மக்கள் போராட்டம்

பிரதமர் மோடி ஆட்சியில் இருந்த இந்த 9 ஆண்டுகளில் தட்சிண கன்னடா மாவட்டத்திற்கு ரூ.35 ஆயிரம் கோடி மானியம் கிடைத்துள்ளது. ரூ.3,289 கோடி பணிகள் தற்போது நடந்து முடிந்துள்ளது. இதுவரை பா.ஜனதா கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் உத்தரவாத திட்டம் என்ற பெயரில் பொய் வாக்குறுதிகளை கூறியுள்ளனர். இதை நிறைவேற்றுவது சாத்தியம் இல்லை.

இந்த உத்தரவாத திட்டத்தால் 200 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்திய மக்கள், மின் கட்டணம் செலுத்த முடியாது என்று அடம் பிடித்து வருகின்றனர். மேலும் பெண்கள் பஸ்களில் டிக்கெட் எடுக்க முடியாது என்று போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு காங்கிரஸ் கட்சி என்ன பதில் கூற இருக்கிறது. இந்த உத்தரவாத திட்டத்தை நிறைவேற்றவில்லை என்றால் பா.ஜனதா கட்சி சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்