பெங்களூருவில் நடந்த கூட்டத்தில் பரபரப்பு காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. மாரடைப்பால் மரணம்

பெங்களூருவில் நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

Update: 2022-11-25 22:11 GMT

பெங்களூரு: பெங்களூருவில் நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

முன்னாள் எம்.எல்.ஏ.

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2023) ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடக்கிறது. இதற்காக விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து காங்கிரஸ் விருப்ப மனுக்களை பெற்றது. அந்த விருப்ப மனுக்களை வழங்கியவர்களுடன் காங்கிரஸ் தலைவர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டம் பெங்களூரு வர்த்தூர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் உள்பட முன்னணி தலைவர்கள், தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வழங்கியவர்கள் கலந்து கொண்டனர். இதில் கதக் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஸ்ரீசைலப்பா பிதரூரும் கலந்து கொண்டார்.

மாரடைப்பால் மரணம்

அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர்கள், அவர் மாரடைப்பால் மரணம் அடைந்துவிட்டதாக அறிவித்தனர். இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டு, வருகிற 27-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கட்சி கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. மயங்கி விழுந்து மரணம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னதாக மரணம் அடைந்த ஸ்ரீசைலப்பா பிதரூர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். மேலும் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஆகியோர் அந்த ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று ஸ்ரீசைலப்பா பிதரூர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்