எனக்கும், சித்தராமையாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு இல்லை- டி.கே.சிவக்குமார் பேட்டி

எனக்கும், சித்தராமையாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு இல்லை என்று காங்கிரஸ் தலைவர் டி.கே சிவகுமார் தெரிவித்துள்ளார்.

Update: 2022-05-22 17:12 GMT

பெங்களூரு:

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடக மேல்-சபை தேர்தலில் போட்டியிட எங்கள் கட்சியில் பலர் டிக்கெட் கேட்டுள்ளனர். யாருக்கு டிக்கெட் வழங்க வேண்டும் என்பது குறித்து கட்சி மேலிடத்திற்கு நாங்கள் ஆலோசனை வழங்கியுள்ளோம். வேட்பாளர் பட்டியலை கட்சி மேலிடம் அறிவிக்கும். வேட்பாளர்களை இறுதி செய்வதில் எனக்கும், சித்தராமையாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தவறானது. நாங்கள் 2 பேரும் அமர்ந்து ஆலோசித்து பெயர்களை இறுதி செய்து கட்சி மேலிடத்திற்கு அனுப்பியுள்ளோம்.

எம்.எல்.ஏ.க்கள் மூலம் நடைபெறும் தேர்தலில் எங்களுக்கு 2 இடங்கள் மட்டும் கிடைக்கும். அனைத்து சமூகங்களையும் மனதில் வைத்து முடிவு செய்துள்ளோம். மாநிலங்களவை தேர்தலில் எத்தனை வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்பது குறித்து கட்சி மேலிடத்திற்கு வாக்கு விவரங்களை அனுப்பி வைத்துள்ளோம். யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்து கட்சி மேலிடம் முடிவு எடுக்கும். மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடம் காங்கிரசுக்கு கிடைக்கும்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்