காங்கிரசின் இலவச மின்சார அறிவிப்பின் பின்னணியில் மின்துறையை தனியார்மயமாக்கும் நோக்கம் உள்ளது; மந்திரி சுனில்குமார் பேட்டி
காங்கிரசின் இலவச மின்சார அறிவிப்பின் பின்னணியில் மின்துறையை தனியார்மயமாக்கும் நோக்கம் உள்ளது என்று மந்திரி சுனில்குமார் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக மின்சாரத்துறை மந்திரி சுனில்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், மின்சாரத்துறை மந்திரியாக இருந்தபோது, மின் வினியோக நிறுவனங்களை திவால் நிலைக்கு தள்ளினார். இப்போது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வீடுகளுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குவதாக கூறுகிறார். இதன் பின்னணியில் மின் வினியோக நிறுவனங்களை தனியார்மயமாக்கும் நோக்கம் உள்ளது.
வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கினால் அந்த நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் சிக்கும். சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது, இருட்டில் பட்ஜெட் புத்தகத்தை வாசித்ததை மறந்துவிட்டார் போல் தெரிகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு மின் வினியோக நிறுவனங்களுக்கு ரூ.9 ஆயிரம் கோடி நிதி உதவி வழங்கி அவற்றை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டுள்ளோம்.
வாக்குகள் பெற வேண்டும் என்பதற்காக மின்சாரத்துறையை காங்கிரசார் விற்பனை செய்ய கூடாது.
இவ்வாறு சுனில்குமார் கூறினார்.