தொழில் அதிபர் வீட்டில் 1½ கிலோ தங்க நகைகள் திருடிய 4 பேர் கைது
பெங்களூருவில் தொழில் அதிபர் வீட்டில் 1½ கிலோ தங்க நகைகள் திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். சம்பவம் நடந்த 48 மணி நேரத்தில் அவர்களை போலீசார் பிடித்தனர்.
சஞ்சய்நகர்:
பெங்களூரு சஞ்சய்நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தொழில் அதிபர் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர் சம்பவத்தன்று குடும்பத்துடன் வெளியூர் சென்று இருந்தார். இதுகுறித்து அறிந்த மர்மநபர்கள் அவர்களது வீட்டிற்குள் புகுந்தனர். அவர்கள் வீட்டில் இருந்த 1½ கிலோ தங்க நகைகளை திருடிவிட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து அறிந்த தொழில் அதிபர் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
மேலும் விசாரணையின்பேரில் 4 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஹரிஷ், சந்திரா, சந்திரபானு உள்பட 4 பேர் என்பது தெரிந்தது. அவர்கள் விமானத்தில் பெங்களூருவுக்கு வந்து, எலகங்கா பகுதியில் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர்.
பின்னர் பூட்டி கிடக்கும் வீடுகளை குறிவைத்து திருட்டில் ஈடுபட்டுள்ளனர். மேலும் திருட்டு நகைகளுடன் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர் என்பது தெரியவந்தது. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கை ஆதாரமாக கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்து ரூ.70 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை போலீசார் மீட்டனர். சம்பவம் நடந்த 48 மணி நேரத்திற்குள் திருடர்களை பிடித்த போலீசாருக்கு பாராட்டுகள் குவிகிறது.