தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது

டி.நரசிப்புராவில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 16 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2023-08-23 21:42 GMT

டி.நரசிப்புரா:

டி.நரசிப்புராவில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 16 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மோட்டார் சைக்கிள் திருட்டு

மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா தாலுகாவில் கடந்த சில மாதங்களாக மோட்டார் சைக்கிள்கள் திருடும் சம்பவங்கள் அதிகரித்து வந்தன. குறிப்பாக வீட்டின் முன்பு நிறுத்தி இருக்கும் மோட்டார் சைக்கிள்களை குறிவைத்து மர்மநபர்கள் திருடி வந்தனர். அந்த மோட்டார் சைக்கிள்களில் வழிப்பறி சம்பவங்களில் மர்மநபர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதனை தடுக்கும் முயற்சியில் போலீசார் ரோந்து பணி, வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனாலும் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து கொண்டே இருந்தது. இந்தநிலையில், மர்மநபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் மோட்டார் சைக்கிள் திருடர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் டி.நரசிப்புரா பன்னூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

2 பேர் கைது

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பன்னூர் ஹோய்ஸ் ரங்கநாதபுர கிராமத்தை சேர்ந்த விஜய் (வயது20), பிரதீபா (21) ஆகியோர் என்பதும், அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் திருட்டு மோட்டார் சைக்கிள் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் டி.நரசிப்புரா டவுன், பன்னூர், கிருகாவலு, சந்தமரவள்ளி ஆகிய பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

அந்த மோட்டார் சைக்கிள்களில் விஜய், பிரதீபா ஆகிய 2 பேர் வழிப்பறி உள்ளிட்ட தொடர் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்த மோட்டார் சைக்கிள்களை அவர்கள் 2 பேரும் விற்பனை செய்தும் வந்துள்ளனர். இதையடுத்து அவர்களிடம் இருந்து 16 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.11 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து பன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்