கிரிக்கெட் ரசிகர்களின் செல்போன், மோட்டார் சைக்கிள் திருட்டு

பெங்களூருவில் கிரிக்கெட் ரசிகர்களின் செல்போன், மோட்டார் சைக்கிள் திருட்டுப்போய் உள்ளது.

Update: 2023-04-25 18:45 GMT

பெங்களூரு:

பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு ஆண்டிற்கான ஐ.பி.எல். போட்டிகள் நடந்து வருகின்றன. இதனை கண்டு ரசிக்க கிரிக்கெட் ரசிகர்கள் படையெடுத்து வருகின்றனர். இதனால் மைதானம் மட்டுமல்லாது கப்பன் பூங்கா பகுதிகளிலும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில் கிரிக்கெட் போட்டிகளை காண்பதற்கு வரும் ரசிகர்கள் தங்கள் மோட்டார் சைக்கிள்களை, போலீசார் அனுமதி அளித்துள்ள பகுதிகளில் நிறுத்துகின்றனர். இதனை பயன்படுத்தி, மர்மகும்பல் வாகன திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2-ந் தேதி நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை காண்பதற்கு சந்தீப் என்ற கல்லூரி மாணவர் தனது நண்பர்களுடன் வந்தார். அவர் தனது மோட்டார் சைக்கிளை செயின்ட் மார்க் கிராஸ் சாலையில் நிறுத்திவிட்டு போட்டியை காண சென்றார். அந்த சமயத்தில் அவரது மோட்டார் சைக்கிளை மர்மநபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து அறிந்ததும், சந்தீப் கப்பன் பூங்கா போலீசில் புகார் அளித்தார்.

இதேபோல் வருமான வரித்துறை கூடுதல் கமிஷனர் பி.ஆர். ரமேஷ் என்பவர் 17-ந் தேதி நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்கு வந்தார். அப்போது அவரது பாக்கெட்டில் இருந்த ரூ.80 ஆயிரம் மதிப்பிலான செல்போனை மர்மநபர்கள் திருடினர். இதுகுறித்து அவர் கப்பன் பூங்கா போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவங்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்