இளம்பெண் வாளால் வெட்டி படுகொலை
விராஜ்பேட்டை பகுதியில் இளம்பெண் வாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. காதல் விவகாரம் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடகு_
வெட்டி கொலை
குடகு மாவட்டம் விராஜ்பேட்டையை அருகே நங்கலா கிராமத்தை சேர்ந்தவர் ஆர்த்தி (வயது 24). அதே கிராமத்தை சேர்ந்தவர் தம்மையா. தொழிலாளி. சம்பவத்தன்று இரவில் ஆர்த்தி வீட்டிற்கு வந்த தம்மையா தனது மோட்டார் சைக்கிளில் ஆர்த்தியை வெளியே அழைத்து சென்றுள்ளார். இதையடுத்து ஆர்த்தி நங்கலா கிராமத்தின் புறநகர் பகுதியில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். மறுநாள் காலையில் அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து விராஜ்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவர்கள் ஆர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர் வாளால் வெட்டி கொலை செய்யப்பட்டது தெரிந்தது. மேலும், அந்த பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கொலை நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் பண்ணை குட்டை அருகே ஒரு ஹெல்மெட், செல்போன், செருப்பு மற்றும் விஷ பாட்டில் ஆகியவை கிடந்தது.
காதல் விவகாரம்
அவற்றை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவை அதே கிராமத்தை சேர்ந்த தம்மையா என்பவருடையது என்பது தெரிந்தது. அதே கிராமத்தை சேர்ந்த ஆர்த்தியை, தம்மையா கொலை செய்து இருக்கலாம் எனவும், போலீசிடம் சிக்காமல் இருக்க விஷத்தை குடித்துவிட்டு பண்ணை குட்டையில் குதித்து இருக்கலாம் எனவும் அவர்கள் சந்தேகிக்கின்றனர்.
ஆனால் ஆர்த்தியை கொலை செய்ய காரணம் என்ன என்பது முதலில் தெரியவில்லை. காதல் விவகாரம் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தினர். ஆனால் அந்த நாய்கள் சிறிது தூரம் ஓடிவிட்டு நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
வாலிபரை தேடும் பணி
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இளம்பெண்ணை யார் கொலை செய்தனர். எதற்காக இந்த கொலை நடந்தது என்பது குறித்து விரைவில் தெரியவரும் என போலீசார் கூறினர். இதற்கிடையே கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு, பண்ணை குட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வாலிபரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இளம் பெண் வாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அசம்பாவிதங்களை தடுக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.