மாமனாரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற பெண்
குடகில் சொத்து தகராறில் மாமனாரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
குடகு-
குடகில் சொத்து தகராறில் மாமனாரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
சொத்து தகராறு
குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகா கர்வாலே அருகே கிக்கரவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நானய்யா. விவசாயி. இவரது மனைவி நீலம்மா என்ற ஜோதி (வயது 28). நானய்யாவின் தந்தை மந்தண்ணா (73). இவர்கள் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் வீட்டையும், சொத்தையும் தங்களுக்கு எழுதி வைக்குமாறு நீலம்மா, மந்தண்ணாவிடம் கேட்டுள்ளார். இதற்கு மந்தண்ணா மறுத்துள்ளார். இதனால் கடந்த 3 ஆண்டுகளாக மாமனார்-மருமகள் இடையே தகராறு இருந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ஒரே வீட்டில் மந்தண்ணாவும், நீலம்மா-நானய்யாவும் தனித்தனியாக சமைத்து சாப்பிட்டு வந்தனர். மேலும், மந்தண்ணாவை வீட்டை விட்டு விரட்ட வேண்டும் என்று நீலம்மா திட்டமிட்டு வந்தார்.
துப்பாக்கியால் சுட்டு கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் நானய்யா விறகு வெட்ட தோட்டத்துக்கு சென்றார். அப்போதும் மாமனார்-மருமகள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மந்தண்ணாவை வீட்டை விட்டு வெளியே செல்லும்படி நீலம்மா கூறி உள்ளார். இதற்கு மறுத்த மந்தண்ணா வீடு தனது பெயரில் உள்ளதாகவும், வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாது என்றும், நீங்கள் தான் வெளியே செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.
பின்னர் மந்தண்ணா வீட்டுக்குள் சென்றுவிட்டார். இதனால் நீலம்மா ஆத்திரம் அடைந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை மந்தண்ணா வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து நீலம்மா, மாமனார் மந்தண்ணாவை நோக்கி சுட்டார். இதில், மந்தண்ணாவின் மார்பில் குண்டு பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி, துடித்து உயிரிழந்தார்.
பெண் கைது
இதற்கிடையே வீட்டுக்கு வந்த நானய்யா, தனது தந்தை துப்பாக்கி குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சோமவார்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் மந்தண்ணாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சொத்து தகராறில் மாமனாரை மருமகள் துப்பாக்கியால் சுட்டு கொன்றது தெரியவந்தது. இதுகுறித்து சோமவார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து நீலம்மாவை கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.