பாழடைந்த வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து சிறுவன் சாவு; பிறந்த நாள் கொண்டாட இருந்த நிலையில் சோகம்

தாவணகெரேயில் பாழடைந்த வீட்டின் சுற்றுச்கூர் இடிந்து விழுந்து பிறந்த நாள் கொண்டாட இருந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.

Update: 2023-06-04 21:29 GMT

தாவணகெரே:

சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது

தாவணகெரே அருகே பாசப்புரா கிராமத்தை சேர்ந்தவர் குருசாந்தய்யா. இவரது மகன் நாகர்ஜுனா (வயது 12). நேற்று அவனுக்கு 12-வது பிறந்தநாளாகும். இதையொட்டி நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்ட குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் நாகர்ஜுனா தனது வீட்டின் அருகே உள்ள ஒரு பாழடைந்த வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தான்.

அப்போது திடீரென்று அந்த வீட்டின் சுற்றுச்சுவர் திடீரென்று இடிந்து விழுந்தது. அந்த சமயத்தில் அங்கு விளையாடி கொண்டிருந்த நாகர்ஜுனா மீது சுவர் விழுந்து அமுக்கியது.

சிறுவன் பரிதாப சாவு

இதில் இடிபாடுகளிடையே சிக்கி நாகர்ஜுனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஆர்.எம்.சி. யார்டு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், பலியான சிறுவன் நாகர்ஜுனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பாழடைந்த வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து சிறுவன் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஆர்.எம்.சி. யார்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சில மணி நேரங்களில் 12-வது பிறந்தநாளை கொண்டாட இருந்த சிறுவன், சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்