வாக்காளர் பட்டியல் விவகாரம் காங்கிரசாரை திருப்பி தாக்கும்- முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி

வாக்காளர் பட்டியல் முறைகேடு விவகாரம் காங்கிரசாரை திருப்பி தாக்கும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

Update: 2022-11-20 22:07 GMT

பெங்களூரு: வாக்காளர் பட்டியல் முறைகேடு விவகாரம் காங்கிரசாரை திருப்பி தாக்கும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

வாக்காளர் பட்டியல்

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறி சித்தராமையா தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சியில் சிலுமே நிறுவனத்திற்கு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த நிறுவனம் வாக்காளர் பட்டியல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரசார் கூறுகிறார்கள். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியினர் எங்கள் மீது குறை சொல்கிறார்கள்.

இந்த முறைகேடு குறித்து நாங்கள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம். கடந்த 2013-ம் ஆண்டு முதல் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளோம். எந்த நோக்கத்தின் அடிப்படையில் முந்தைய காங்கிரஸ் அரசு சிலுமே நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியது என்ற உண்மை வெளியே வர வேண்டும்.

நிபந்தனை விதித்தோம்

நாங்கள் பிறப்பித்த உத்தரவில், வாக்காளர் விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள அனுமதி அளித்தோம். அந்த நிறுவனத்திற்கு எந்த அரசியல் கட்சியுடனும் சம்பந்தம் இருக்க கூடாது என்று நாங்கள் நிபந்தனை விதித்தோம். ஆனால் சித்தராமையா ஆட்சியில், வாக்காளர் பட்டியலை திருத்தும் பணிகளை மேற்கொள்ள அந்த நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

தேர்தல் ஆணையம் செய்ய வேண்டிய பணியை ஒரு தனியார் நிறுவனத்திற்கு வழங்கியது குற்றம் ஆகும். அவர்களின் ஆட்சியில் பூத் மட்டத்திலான பணியாளர்களை (பி.எல்.ஓ.) நியமிக்கும் அதிகாரம் தாசில்தார்களுக்கு வழங்கப்பட்டது. இந்த விவகாரத்தில் சித்தராமையா ஆட்சியில் அத்துமீறி அதிகார துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அப்பட்டமான பொய்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் போன்ற பணிகளை மேற்கொள்ளும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு தான் உள்ளது. அந்த அதிகாரம் அரசுக்கு இல்லை. ஆனால் காங்கிரஸ் கட்சியினர் அரசியல் உள்நோக்கத்துடன் எங்கள் அரசு மீது குறை சொல்கிறார்கள். எல்லா கட்சிகளும், தனியார் அமைப்புகள் மூலம் மக்கள் கருத்துக்கணிப்புகளை நடத்துகிறது.

பெங்களூருவில் 27 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு இருப்பதாக காங்கிரஸ் கூறுகிறது. இது அப்பட்டமான பொய். காங்கிரசின் இந்த குற்றச்சாட்டு தவறானது.

திருப்பி தாக்கும்

வேறு பகுதியை சேர்ந்தவர்களை, இன்னொரு பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர்ளை சேர்த்து வாக்காளிக்க வைக்க காங்கிரஸ் தந்திரம் செய்தது. அந்த தந்திரம் இனிமேல் எடுபடாது. காங்கிரஸ் கட்சியினர் யாருக்கு வேண்டுமானாலும் புகார் அளிக்கட்டும். விசாரணையில் உண்மைகள் வெளிவரும். இந்த விவகாரம் காங்கிரசாரை திருப்பி தாக்கும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்