கர்நாடகாவுக்கு வருகை தந்த ஐ.நா. பொது சபை தலைவர்; அங்கன்வாடி மையத்திற்கு புகழாரம்

கர்நாடகாவுக்கு வருகை தந்த ஐ.நா. பொது சபை தலைவர் கொரோசி அங்கன்வாடி மையத்தில் பார்வையிட்டு அதன் பணிகளை பாராட்டி உள்ளார்.

Update: 2023-02-01 06:38 GMT



பெங்களூரு,


ஐ.நா. பொது சபையின் 77-வது தலைவராக சாபா கொரோசி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தோ்ந்தெடுக்கப்பட்டார். இதன்பின், இந்தியாவில் கடந்த 29-ந்தேதி முதல் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். தலைவர் பதவியேற்ற பின்னர் அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் என்ற சிறப்பை பெற்றுள்ளது.

இந்த பயணத்தின் ஒரு பகுதியாக பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அதில், உக்ரைன் போர் உள்ளிட்ட சர்வதேச விவகாரங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டு உள்ளது. அதன்பின் அவர் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். இதில், இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவம் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

இதன்பின் கொரோசி கூறும்போது, இந்த உலகம் எப்படி இருக்க வேண்டும் மற்றும் அதில், இந்தியாவின் பங்கு என்னவாக இருக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையை இந்தியா கொண்டுள்ளது. அது நடைபெற வேண்டும் என்பதற்காக பொது சபையில் நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம் என்று கூறினார்.




 

இதனை தொடர்ந்து, கர்நாடகாவுக்கு கொரோசி நேற்று சென்றார். அவர் அங்கன்வாடி மையத்திற்கு சென்று பார்வையிட்டார். தேவையான அத்தியாவசிய சேவைகள் வழங்கப்பட்டு வருவதற்காக மையத்திற்கும், மாநில அரசுக்கும் மற்றும் யுனிசெப் அமைப்புக்கும் தனது பாராட்டுகளை தெரிவித்து கொண்டார்.

அங்கன்வாடி குழந்தைகளை அழைத்து, அவர்களுடன் சிரித்து பேசி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். பணியாளர்களுடன் குழு புகைப்படமும் எடுத்து கொண்டார்.

இதுபற்றி டுவிட்டரில் கொரோசி வெளியிட்ட செய்தியில், உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட ஒரு சிறந்த நாள். கர்நாடகாவில் உள்ள கிராமப்புற குழந்தைகள் நல மையம் எனப்படும் அங்கன்வாடி மையத்திற்கு சென்றேன்.

சமூகம், மாநில அரசு மற்றும் இந்திய யுனிசெப் அமைப்பின் முயற்சிகளுக்கும் மற்றும் அத்தியாவசிய சேவைகளை வழங்கி தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் ஆதரவு அளித்து வருவதற்காக எனது பாராட்டுகள் என தெரிவித்து உள்ளார்.

கர்நாடகாவின் கண்ணூரு நகரில் உள்ள முதன்மை சுகாதார மையத்தில், ஐ.நா. அமைப்புடன் இணைந்து அரசு எப்படி கொரோனா மேலாண்மைக்கு உதவி வருகிறது, அதற்கு டிஜிட்டல் தொழில் நுட்பங்களை எப்படி பயன்படுத்துகின்றனர்? என்பது பற்றியும் பார்வையிட்டேன். கொரோனா தடுப்பூசிகளை பாதுகாப்பதில் திறமையாக செயல்படுகின்றனர் என அவர் தெரிவித்து உள்ளார்.

அவரது வருகையின் ஒரு பகுதியாக பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் மையத்தின் கல்வியாளர்களை சந்தித்து பேசினார். பொது சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளையும் அவர் சந்தித்து உரையாடினார்.

Tags:    

மேலும் செய்திகள்