குடும்ப தகராறில் மாமியாரை கத்தியால் குத்திக் கொன்ற வாலிபர்
குடும்ப தகராறில் மாமியாரை கத்தியால் குத்திக் கொன்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கெங்கேரி:
குடும்ப தகராறு
பெங்களூரு கெங்கேரி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் திவாகர். இவருக்கும், நாகதேவனஹள்ளியை சேர்ந்த எலல் அரசி (வயது 48) என்பவரின் மகளுக்கும் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் தம்பதி இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பும் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் அவரது மனைவி, திவாகரிடம் கோபித்து கொண்டு குழந்தையுடன் தாய் எலல் அரசியின் வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில் நேற்று திவாகர், மாமியார் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டில் இருந்த தனது குழந்தையை தூக்கி கொண்டு தனது வீட்டுக்கு தூக்கி சென்றார்.
வாக்குவாதம்
இதற்கிடையே குழந்தை காணாமல் போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்த எலல் அரசி மற்றும் திவாகரின் மனைவி, குழந்தையை வீடு முழுவதும் தேடி பார்த்தனர். ஆனால் குழந்தை கிடைக்கவல்லை. இந்த நிலையில், குழந்தையை திவாகர் தூக்கி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள், திவாகரை தொடர்புகொண்டு குழந்தையை கொண்டு வந்து விடுமாறு கூறி உள்ளனர்.
ஆனால் அதற்கு திவாகர் மறுத்துவிட்டார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் திவாகர், மாமியார் வீட்டுக்கு மீண்டும் வந்தார். அப்போது குழந்தை தொடர்பாக திவாகருக்கும், மாமியாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கொலை
இதனால் ஆத்திரமடைந்த திவாகர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாமியார் என்றும் பாராமல் எலல் அரசியை சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து எலல் அரசி உயிரிழந்தார். இதுகுறித்து உடனடியாக கெங்கேரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் கொலையான எலல் அரசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், குழந்தை தொடர்பான தகராறில் மாமியாரை திவாகர் கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து கெங்கேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து திவாகரை வலைவீசி தேடி வருகிறார்கள்.