பெங்களூரு அருகே பலத்த மழைக்கு சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 4 பேர் உடல் நசுங்கி சாவு

பெங்களூரு அருகே பலத்த மழைக்கு சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 4 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலியானாா்கள். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Update: 2022-07-21 12:55 GMT

பெங்களூரு:

4 தொழிலாளா்கள் சாவு

பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டை தாலுகா திருமலாஷெட்டிஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தொழிற்பேட்டை பகுதியில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அங்கு பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் அடுக்குமாடி குடியிருப்பு அருகேயே சிறிய ஷெட்டுகள் அமைத்து தங்கி உள்ளனர். அதன்படி, நேற்று இரவு தொழிலாளர்கள் சாப்பிட்டுவிட்டு ஷெட்டில் படுத்து தூங்கினார்கள்.

இந்த நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென்று பக்கத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சுற்றுச்சுவர் இடிந்து தொழிலாளர்கள் படுத்திருந்த ஷெட்டில் விழுந்தது. இதில், இடிபாடுகளிடையே சிக்கி ஷெட்டில் படுத்திருந்த 4 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள்.

பீகாரை சேர்ந்தவர்கள்

இதுபற்றி தகவல் அறிந்ததும் திருமலாஷெட்டிஹள்ளி போலீசார் விரைந்து வந்தனர். உடனே அவர்கள் படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு ஒயிட்பீல்டு பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களது உயிருக்கு ஆபத்தில்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக இதுபற்றி அறிந்ததும் பெங்களூரு புறநகர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புருஷோத்தம் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.

அப்போது பலியான தொழிலாளா்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்த மனோஜ்குமார் சதம் (வயது 35), ராமக்குமார் (25), நிதீஸ்குமார் (22) என்று தெரிந்தது. மற்றொரு தொழிலாளியின் பெயர் தொியவரவில்லை. படுகாயம் அடைந்தவர்கள் மேற்கு வங்காளத்தை சேர்ந்த சுனில் மண்டல், சம்பு மண்டல், திலீப், துர்கேஷ் என்று தெரியவந்துள்ளது.

கனமழையால் சுவர் இடிந்தது

பெங்களூரு புறநகரில் நேற்று இரவில் இருந்து நள்ளிரவு வரை இடைவிடாமல் கனமழை கொட்டிதீர்த்து இருந்தது. இதன் காரணமாக அந்த நிறுவனத்திற்கு சொந்தமான காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த காம்பவுண்டு சுவர், சிமெண்டு கற்களால் கட்டப்பட்டுஇருந்தது.அந்த சிமெண்டு கற்கள் தொழிலாளா்கள் மீது விழுந்து அமுக்கியதால், அவர்கள் 4 பேர் உயிர் இழந்ததுடன், மற்ற 4 பேரும் படுகாயம் அடைந்தது தெரியவந்துள்ளது.

இதுகுறி்த்து திருமலாஷெட்டிஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஒசக்கோட்டையில் நேற்று சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்