ஒடிசா ரெயில் விபத்து கோர காட்சிகள் நினைவை விட்டு அகலாது; உயிர் தப்பிய பயணிகள் அதிர்ச்சி பேட்டி

சென்னையில் மகனை மருத்துவரிடம் காட்டுவதற்காக வந்த தம்பதி, ஒடிசா ரெயில் விபத்தில் உயிர் தப்பியுள்ளனர்.

Update: 2023-06-03 09:40 GMT

புர்பா மேதினிப்பூர்,

ஒடிசாவில் நேற்று இரவு 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. ரெயில் விபத்தின் கோர காட்சிகள் நினைவை விட்டு அகலாது என்று உயிர் தப்பிய குடும்பத்தினர் பேட்டியில் கூறியுள்ளனர்.

இந்த விபத்தில், மேற்கு வங்காளத்தின் புர்பா மேதினிப்பூர் மாவட்டத்தின் மஹிசடால் நகரில் மலுபாசன் கிராமத்தில் வசித்து வரும் 3 பேர் கொண்ட ஒரு குடும்பம் உயிர் தப்பி உள்ளது.

சுப்ரதோ பால், தேபோஸ்ரீ பால் மற்றும் அவர்களின் மகன் என 3 பேரும் சென்னை வருவதற்காக ரெயிலில் பயணித்து உள்ளனர். அவர்களது மகனை சென்னையில் சிகிச்சைக்காக மருத்துவரிடம் காட்டுவதற்காக வந்து உள்ளனர்.

அப்போது, இந்த பயங்கர விபத்து நடந்து உள்ளது. இதுபற்றி விபத்தில் உயிர் தப்பிய சுப்ரதோ பால் கூறும்போது, நாங்கள் நேற்று காரக்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில் ஏறி, சென்னைக்கு புறப்பட்டோம்.

பாலசோர் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் கடந்து செல்லும்போது, திடீரென அது குலுங்கியது. அதன்பின், பெட்டி முழுவதும் புகைமண்டலம் போன்று காட்சியளித்தது. என்னால் யாரையும் பார்க்க முடியவில்லை.

அந்த பகுதியை சேர்ந்த உள்ளூர்வாசிகள் ஓடி வந்து எனக்கு உதவினர். அவர்கள் இடிபாடுகளில் இருந்து என்னை வெளியே இழுத்து, மீட்டனர். கடவுள் எனக்கு 2-வது வாழ்வை கொடுத்தது போன்று உள்ளது என அதிர்ச்சியுடன் கூறியுள்ளார்.

இந்த ரெயில் விபத்தில் உயிர் தப்பிய மற்றொரு பயணியான தேபோஸ்ரீ பால் கூறும்போது, எங்களுடைய குழந்தையை காட்டுவதற்காக நாங்கள் சென்னைக்கு போய் கொண்டு இருந்தோம். அப்போது பாலசோரில் விபத்து ஏற்பட்டது.

எங்களால் எதுவும் புரிந்து கொள்ள முடியவில்லை. யாரையும் கண்டறிய முடியவில்லை. மக்கள் ஒருவர் மீது ஒருவர் மோதியபடி இருந்தனர். எங்களது மகனையும் நாங்கள் பார்க்க முடியவில்லை.

நாங்கள் எப்படி பிழைத்தோம் என்பதே எங்களுக்கு தெரியாது. எங்களுக்கு இது 2-வது வாழ்வு கிடைத்தது போன்றே உள்ளது. நான் வாழும் வரை, அந்த கோர காட்சிகள் ஒருபோதும் எனது நினைவை விட்டு அகலாது என கூறியுள்ளார்.

ஒடிசாவில் நேற்று இரவு பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில், ஷாலிமார்-சென்னை சென்டிரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் சரக்கு ரெயில் ஆகிய 3 ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பயங்கர விபத்து ஏற்பட்டதில் 261 பேர் பலியாகி உள்ளனர்.

விபத்தில் காயமடைந்த 650-க்கும் மேற்பட்டோர் பல்வேறு நகர மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். இந்த ரெயில் விபத்தில் மீட்பு பணிகள் நிறைவடைந்து, மறுசீரமைப்பு பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்