இஸ்லாமிய மத கடவுளின் இறைதூதர் இஸ்லாமிய மதத்தினரின் இதயங்களில் வாழ்கிறார் - ஓவைசி

இஸ்லாமிய மத கடவுளின் இறைதூதர் இஸ்லாமிய மதத்தினரின் இதயங்களில் வாழ்கிறார் என ஓவைசி தெரிவித்துள்ளார்.

Update: 2022-08-24 16:16 GMT

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் கோஷ்யமஹல் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. டி ராஜா. இவர் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த நகைச்சுவை கலைஞர் முனாவர் பரூக்கியை விமர்சித்தும், இஸ்லாமிய மத கடவுளின் இறை தூதர் குறித்து நுபுர் சர்மா தெரிவித்த கருத்துக்களை மேற்கொள்காட்டியும் பேசினார். அவர் பேசிய வீடியோ 'ஸ்ரீ ராம் சேனல் தெலுங்கானா' என்ற யூடியூப் சேனல் ஒன்றில் வெளியானது. அந்த வீடியோ யூடியூப் நிறுவனத்தால் பின்னர் நீக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இஸ்லாமிய மத கடவுளின் இறைதூதர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாகவும், டி ராஜா-வை கைது செய்ய வேண்டும் என இஸ்லாமிய மதத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, பாஜக எம்.எல்.ஏ. டி.ராஜாவை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், டி.ராஜாவை கட்சியில் இருந்து பாஜக சஸ்பெண்ட் செய்தது. மேலும், இது தொடர்பாக 10 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கவும் டி.ராஜாவுக்கு பாஜக உத்தரவிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட டி.ராஜா ஜாமின்கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த கோர்ட்டு டி.ராஜாவை ஜாமினில் விடுதலை செய்தது. இதையடுத்து, நேற்று அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். அவரது விடுதலையை கண்டித்து இஸ்லாமிய மதத்தினர் நேற்று இரவு முதல் ஐதராபாத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், எம்.எல்.ஏ. ராஜா சிங் விடுதலை செய்யப்பட்டதை அனைத்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் (எஐஎம்ஐஎம்) கட்சி தலைவரும், ஐதராபாத் எம்.பி.யான அசாதுதீன் ஓவைசி கண்டித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், பாஜக மற்றும் அக்கட்சியின் எம்.எல்.ஏ. டி.ராஜா இஸ்லாமிய மதகடவுளின் இறைத்தூதர் குறித்து வீடியோ வெளியிட்டு அவர்களது வெறுப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இஸ்லாமிய மத கடவுளின் இறைதூதர் இஸ்லாமியர்களின் இதயங்களில் வாழ்கிறார். எம்.எல்.ஏ. கைது செய்யப்படும்வரை நாங்கள் எங்கள் போராட்டத்தை தொடருவோம்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்