கொள்ளையடிக்க முயன்றவர்களை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்- தப்பி ஓடாமல் மேலும் 2 பேர் சரண் அடைந்தனர்
கலபுரகி அருகே வீடு புகுந்து கொள்ளையடிக்க முயன்றவர்களை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து தப்பி ஓடாமல் மேலும் 2 பேர் போலீசாரிடம் சரண் அடைந்தனர்.
கலபுரகி: கலபுரகி அருகே வீடு புகுந்து கொள்ளையடிக்க முயன்றவர்களை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து தப்பி ஓடாமல் மேலும் 2 பேர் போலீசாரிடம் சரண் அடைந்தனர்.
கொள்ளையடிக்க முயற்சி
கர்நாடக மாநிலம் கலபுரகி (மாவட்டம்) டவுன் பித்தாப்பூர் காலனியில் ஒரு வீட்டில் நேற்று அதிகாலையில் மர்ம நபர்கள் 4 பேர் புகுந்து கொள்ளையடிக்க முயற்சித்துக் கொண்டிருப்பதாக அசோக்நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அசோக்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பண்டித் சாகர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
போலீசார் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது வீட்டில் இருந்து தப்பிக்க முயன்ற கொள்ளையர்கள் போலீஸ்காரர் சிவசரண் என்பவரை நோக்கி ஓடினர். அவர்களை போலீஸ்காரர் சிவசரண் பிடிக்க முயன்றார். அப்போது அவர்கள் சிவசரணை தாக்கிவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
கால்களில் குண்டு துளைத்தது
இதையடுத்து இன்ஸ்பெக்டர் பண்டித் சாகர் தப்பி ஓட வேண்டாம் என்று கொள்ளையர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். ஆனால் அவர்கள் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருந்தனர். இதனால் அவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி ஒருமுறை சுட்டு மீண்டும் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். ஆனால் அதை கொள்ளையர்கள் கேட்காமல் தொடர்ந்து ஓடினர்.
இதையடுத்து அவர்களை நோக்கி இன்ஸ்பெக்டர் பண்டித் சாகர் துப்பாக்கியால் 2 ரவுண்டு சுட்டார். இதில் 2 பேரின் கால்களில் குண்டு துளைத்தது. இதனால் அவர்கள் 2 பேரும் அங்கேயே சுருண்டு விழுந்தனர்.
சரண் அடைந்தனர்
அதையடுத்து மற்ற 2 பேரும் ஓடாமல் அங்கே நின்று போலீசாரிடம் சரண் அடைந்தனர். அதையடுத்து குண்டு காயம் அடைந்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கலபுரகி மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அதேபோல் கொள்ளையர்கள் தாக்கியதில் காயம் அடைந்த போலீஸ்காரர் சிவசரண், சிகிச்சைக்காக கலபுரகியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில் கைதான 4 பேரும் மராட்டிய மாநிலம் உஸ்மா நாபாதா மாவட்டம் தலுஜாபூர் தாலுகா ஜலகோலன லவா, தேவிதாசா உள்பட 4 பேர் என்பதும், பகல் நேரங்களில் பூட்டிக் கிடக்கும் வீடுகள், ஆளில்லா வீடுகளை நோட்டமிடும் அவர்கள் இரவில் வீடுகளில் புகுந்து கொள்ளையடிப்பதை தொழிலாக வைத்திருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து அவர்கள் 4 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் பற்றி கலபுரகி டவுன் அசோக்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.