மைசூரு-பெங்களூரு விரைவு சாலைக்கு நால்வடி கிருஷ்ணராஜ உடையார் பெயர்

மைசூரு-பெங்களூரு விரைவு சாலைக்கு நால்வடி கிருஷ்ணராஜ உடையார் பெயரை சூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.சி.க்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2022-12-27 18:45 GMT

மண்டியா:-

பெங்களூரு-மைசூரு விரைவு சாலை

பெங்களூரு-மைசூரு இடையே 10 வழி விரைவு சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. நெடுஞ்சாலையில் மேம்பாட்டு பணிகள் விரைவாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், பெங்களூரு-மைசூரு விரைவு சாலைக்கு மைசூரு மன்னர் நால்வடி கிருஷ்ணராஜ உடையார் பெயரை சூட்ட வேண்டும் காங்கிரஸ் எம்.எல்.சி.க்களாக மாதகவுடா, தினேஷ் கூலிகவுடா ஆகியோர் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மந்திரிகள் கோபாலய்யா, நாராயணகவுடா, சி.சி.பட்டீல், மத்திய நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்காரி ஆகியோருக்கு மனு அளித்துள்ளனர்.

நால்வடி கிருஷ்ணராஜ உடையார் பெயர்

அந்த மனுவில், புகழ்பெற்ற கே.ஆர்.எஸ். அணையை கட்டிய மைசூரு மன்னர் நால்வடி கிருஷ்ணராஜ உடையாரின் பங்களிப்பை யாராலும் மறக்க முடியாது. மாநிலத்தின் முதல் சர்க்கரை ஆலையான மண்டியாவில் உள்ள மைசுகர் சர்க்கரை ஆலை, மைசூருவில் கே.ஆர். ஆஸ்பத்திரி, பத்ராவதியில் இரும்பு தொழிற்சாலை ஆகியவற்றை நிறுவி உள்ளார்.

இதனால் பெங்களூரு-மைசூரு விரைவு சாலைக்கு நால்வடி கிருஷ்ணராஜ உடையார் பெயரை சூட்டி அவருக்கு கவுரவம் அளிக்க வேண்டும் என்று கூறி இருந்தனர். இதுதொடர்பாக முதல்-மந்திரியிடம் பேசுவதாக மந்திரிகள் கோபாலய்யா, நாராயணகவுடா ஆகியோர் உறுதி அளித்துள்ளனர்.

காவிரி விரைவு சாலை

இதற்கு முன்பு பா.ஜனதா எம்.பி. பிரதாப் சிம்ஹா, 'உத்தரபிரதேசத்தில் யமுனை விரைவு சாலை, கங்கா விரைவு சாலை, மத்திய பிரதேசத்தில் நர்மதா விரைவு சாலை இருப்பது போல, கர்நாடகத்தில் மைசூரு-பெங்களூரு விரைவு சாலைக்கு காவிரி விரைவு சாலை என பெயரிட வேண்டும்' என்று கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்