வாய் பேச முடியயத இளம்பெண் படுகொலை

மங்களூருவில் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி இளம்பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மர்மநபருக்கு போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2023-02-01 20:26 GMT

மங்களூரு:-

பீகார் இளம்பெண்

பீகாரை சேர்ந்தவர் சரிதா வர்மா (வயது 23). இவர் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே உல்லால் போலீஸ் எல்லைக்குட்பட்ட கொல்யா சரஸ்வதி காலனி பகுதியில் தனது சகோதரர்கள் மற்றும் அண்ணி ஆகியோருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவர், வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி ஆவார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவரது 2 சகோதரர்களும் வேலைக்கு சென்றுவிட்டனர். மேலும் அவரது அண்ணி மருத்துவமனைக்கு சென்றுவிட்டார்.

இதனால் சரிதா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இந்த நிலையில் மருத்துவமனைக்கு சென்ற அவரது அண்ணி வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது சரிதா, கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கதறி அழுதார்.

கொலை

இதுபற்றிய தகவல் அறிந்ததும் உல்லால் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், சரிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், யாேரா மர்மநபர்கள் சரிதாவை கொலை செய்து கை,கால்களை கட்டி உடலைதூக்கில் தொங்கவிட்டு சென்றது தெரியவந்தது.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், சரிதா வீட்டில் தனியாக இருந்த சமயத்தில் வாலிபர் ஒருவர் வந்து சென்றது தெரியவந்தது. இதனால் அவர் தான் சரிதாவை கொலை செய்ததை போலீசார் உறுதி செய்தனர். அவர் எதற்காக சரிதாவை கொலை செய்தார் என்பது தெரியவில்லை. மேலும் அந்த நபர் சரிதாவை கற்பழித்து கொலை செய்தாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மர்மநபருக்கு வலைவீச்சு

இதுகுறித்து உல்லால் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்