ஆற்றில் மூழ்க இருந்த தனது குட்டியை காப்பாற்றிய தாய் யானை; வைரலான வீடியோ
மேற்கு வங்காளத்தில் ஆற்று நீரில் மூழ்க இருந்த தனது குட்டியை தாய் யானை காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தின் வடக்கு வங்காளத்தில் நக்ரகடா பகுதியருகே ஆறு ஒன்றின் இந்த பக்கத்தில் இருந்து யானை கூட்டம் கடந்து அந்த பக்கம் சென்றுள்ளது. ஆற்றில் அதிவேக நீரோட்டம் இருந்துள்ளது. இதில், அந்த கூட்டத்தில் இருந்த குட்டி யானை ஒன்று சிக்கி கொண்டது.
அதனால், கரைக்கு வரமுடியவில்லை. உடன் இருந்த தாய் யானை கூட்டத்தினரை ஒரு முறை பார்த்து விட்டு, குட்டி யானையையும் பார்க்கிறது. அந்த கூட்டத்தில் இருந்த மற்ற யானைகள் உதவிக்கு வராமல், ஒன்றன் பின் ஒன்றாக ஆற்றை கடந்து கரையில் ஏறி மேலே சென்றன.
ஆனால், ஆற்றில் சிக்கிய குட்டி யானையை மீட்கும் முயற்சியில் தாய் யானை இறங்கியது. சற்று தூரம் வரை குட்டி யானை நீரோட்டத்தில் அடித்து செல்லப்பட்டது. அதன் பின்னாலேயே தாய் யானை சென்றது. பின்பு கரையை நோக்கி குட்டி யானையை தள்ளியபடி சென்றது.
குட்டி யானை கரை சேர்ந்தவுடன், அதனை அழைத்து கொண்டு தனது கூட்டம் மேலேறிய வழியில் பயணித்தது. இந்த வீடியோவை வன துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் என்பவர் வெளியிட்டு உள்ளார்.
அதில், தாய் யானை ஆற்றில் மூழ்க இருந்த தனது கன்றை காப்பாற்றிய சிறந்த வீடியோவை நீங்கள் காண இருக்கிறீர்கள். வடக்கு வங்காளத்தின் நக்ரகடா பகுதியருகே வீடியோ எடுக்கப்பட்டு உள்ளது என தலைப்பிடப்பட்டு உள்ளது.
மனிதர்களை போன்று விலங்கு, பறவை போன்ற இனங்களும் தாய் அன்புடன் செயல்படும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வீடியோ அமைந்து உள்ளது. இந்த வீடியோவை ஆயிரக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் பார்வையிட்டு உள்ளனர். தாயின் அன்பு பற்றி பெருமையுடன் பலர் விமர்சனங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.