வயிற்றிலேயே குட்டி இறந்த நிலையில் தொற்று பாதித்து தாய் யானை செத்தது; பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் பரிதாபம்

பெங்களூரு பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் இறந்த குட்டியை வெளியே எடுத்த நிலையில், தாய் யானை தொற்று பாதித்து செத்தது.

Update: 2023-04-21 22:26 GMT

பெங்களூரு:

சிறுத்தை, புலி

பெங்களூரு புறநகர் ஆனேக்கல் தாலுகாவில் பன்னரகட்டா உயிரியல் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள விலங்குகளை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் பலரும் வருகை தந்து வருகின்றனர். இந்த பூங்காவில் சுவர்ணா என்ற 47 வயது பெண் யானை உள்ளது. இந்த யானை தற்போது கருவுற்று இருந்தது.

அதனை பூங்கா ஊழியர்கள் பராமரித்து வந்தனர். இந்த நிலையில் யானைக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து கால்நடை டாக்டருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த டாக்டர் யானையை பரிசோதனை செய்தார். அப்போது அதன் வயிற்றில் இருந்த குட்டி சாகும் தருவாயில் இருந்தது. அதாவது அந்த குட்டி தாய் வயிற்றில் இருக்கும்போதே நோய் பாதிக்கப்பட்டு இருந்தது.

குட்டி செத்தது

இதையடுத்து அந்த குட்டி யானையை அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுக்க முடிவு செய்தனர். அதற்காக தாய் யானைக்கு அறுவை சிகிச்சை செய்தனர். மேலும் குட்டியை வெளியே எடுத்தனர். ஆனால் அதற்குள் யானை குட்டி செத்தது. இதற்கிடையே அறுவை சிகிச்சை செய்ததில் தாய் யானைக்கு தொற்று ஏற்பட்டது. இதனால் அந்த யானை அவதி அடைந்து வந்தது. கால்நடை டாக்டர் யானைக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று பிற்பகலில் சுவர்ணா பரிதாபமாக செத்தது. இதையடுத்து சுவர்ணாவின் உடலை பூங்காவின் ஒரு பகுதியில் ஊழியர்கள் அடக்கம் செய்தனர். ஒரே நேரத்தில் யானை மற்றும் அதன் குட்டி செத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பூங்கா நிர்வாகத்தினர் கூறுகையில், சுவர்ணா யானை பல குட்டிகளை ஈன்று இருந்ததாகவும், அதன் சத்து குறைபாடு ஏற்பட்டு தற்போது செத்ததாகவும் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்