போலீஸ் நிலையம் முன் வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது
‘தீர்த்தஹள்ளி அருகே போலீஸ் நிலையம் முன்பு வாலிபரை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
சிவமொக்கா:
சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகா மாளூரை சேர்ந்தவர்கள் சமிஉல்லா(வயது 22), ரிஸ்வான். இவர்கள் 2 பேரும் கடந்த 9-ந்தேதி மிலாது நபி பண்டிகையை கொண்டாடிவிட்டு மாளூர் போலீஸ் நிலையம் வழியாக சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு முற்றி கைகலப்பாகியுள்ளது.
இதனால் போலீஸ் நிலையம் முன்பே ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர். இந்த சந்தர்ப்பத்தில் ஆத்திரமடைந்த ரிஸ்வான் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சமி உல்லாவின் நெஞ்சு பகுதியில் குத்தியுள்ளார். இதையறிந்த மாளூர் போலீசார் விரைந்து வந்து சமி உல்லாவை மீட்டு சிகிச்சைக்காக தீர்த்தஹள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டநிலையில் மணிப்பால் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதற்கிடையே போலீசார், ரிஸ்வானை கைது செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.