டெல்லியில் பைக்கில் சென்றவரை மோதி விட்டு காரில் தப்பிய நபர் கைது

டெல்லியில் பைக்கில் சென்றவரை மோதி விட்டு காரில் தப்பி சென்ற நபரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

Update: 2022-06-06 16:38 GMT



புதுடெல்லி,



டெல்லியில் சாலையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் பைக்கில் முன்னால் சென்றவரை காரில் சென்ற நபர் மோதி செல்லும் வீடியோ வெளிவந்து பரபரப்பு ஏற்படுத்தியது.

இதில், கார் மோதியதில் பைக் சரிகிறது. அதில் பயணித்த நபரும், கீழே விழுகிறார். இதனை அவருக்கு பின்னால் வந்த நண்பர் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

இதுபற்றி பாதிக்கப்பட்ட நபரான ஷ்ரேயான்ஷ் (வயது 20) செய்தியாளர்களிடம் கூறும்போது, என்னுடைய நண்பர்கள் 10 பேருடன் குருகிராமில் இருந்து டெல்லி நோக்கி திரும்பி கொண்டிருந்தேன்.

பைக்கில் சென்ற எங்களை நெருங்கியபடி சாலையில் காரில் வந்த நபர் ஓட்டி சென்றார். எனது நண்பரை மிரட்டியதுடன், தகாத வார்த்தைகைளால் திட்டினார்.

இதனால், எனது நண்பர் பைக்கை சற்று மெதுவாக ஓட்டினார். ஆனால், நான் அவர்களை கடந்து முன்னால் சென்று விட்டேன்.

அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. அதன்பின்னர், காரில் வந்த அந்த நபர் விரைவாக ஓட்டி வந்து, எனது பைக் மீது மோதி விட்டு, நிற்காமல் சென்று விட்டார் என கூறியுள்ளார்.

இதுபற்றி டெல்லி போலீசார் கூறும்போது, பைக்கில் சென்றவர்களிடம் எழுத்துப்பூர்வ புகார் ஒன்றை அளிக்கும்படி நாங்கள் கேட்டிருக்கிறோம். காரில் வந்த நபர் அடையாளம் காணப்பட்டு உள்ளார். பதேபூர் காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணை மேற்கொள்வோம் என கூறியுள்ளனர்.

இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த 26 வயதுடைய கார் ஓட்டுனர் இன்று கைது செய்யப்பட்டார். காரும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது என ஏ.டி.சி.பி. (தெற்கு) ஹர்ச வர்தன் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்