அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் உயிரற்ற உடல்களே திரும்பும்; சஞ்சய் ராவத் எச்சரிக்கை

அசாமில் இருந்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் உயிரற்ற உடல்களே திரும்பும் என சஞ்சய் ராவத் எம்.பி. எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

Update: 2022-06-27 02:21 GMT



புனே,



மராட்டியத்தில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆதரவுடன் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா ஆட்சி நடந்து வரும் சூழலில், கடந்த சில நாட்களாக மராட்டிய மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் ஓரணியில் திரண்டு உள்ளனர். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

அசாமின் கவுகாத்தி நகரில் உள்ள புளூ ரேடிசன் ஓட்டலில், சிவசேனா மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள், ஆளும் அரசுக்கு எதிராக மறைமுக போர்க்கொடியை உயர்த்தி உள்ளனர். அவர்களை ஆலோசனை நடத்த மும்பைக்கு வரும்படி, சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் அழைப்பு விடுத்தும் பலனில்லை. கூட்டணி மீது அதிருப்தி தெரிவித்ததுடன், கூட்டணியை விட்டு வெளியே வரும்படி சிவசேனாவுக்கு ஷிண்டே அழைப்பு விடுத்து உள்ளார்.

கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த ஷிண்டே, சட்டமன்ற கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக அஜய் சவுத்ரியை பதவியில் அமர்த்த முடிவாகி உள்ளது. ஷிண்டே, மொத்தமுள்ள 55 சிவசேனா எம்.எல்.ஏ.க்களில் 40 பேர் தனக்கு ஆதரவாக உள்ளனர். தவிர 12 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் உடன் உள்ளனர் என கூறியுள்ளார்.

இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டே டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், மகா விகாஸ் அகாடி அரசின் பிடியில் இருந்து சிவசேனா மற்றும் அதன் தொண்டர்களை விடுவிக்க நான் விரும்புகிறேன் என்பதனை சிவசேனா தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதற்காகவே நான் போராடி வருகிறேன். இந்த போரானது, கட்சி தொண்டர்களின் முன்னேற்றத்திற்காக என்று ஏக்நாத் ஷிண்டே தெரிவித்து உள்ளார்.

இந்த சூழலில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறும்போது, அசாமில் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 40 பேர் உயிருடன் இல்லை. அவர்களது உயிரற்ற உடல்களே மராட்டியத்திற்கு திரும்பும். அவர்களது ஆன்மாக்கள் இறந்து விட்டன.

அசாமின் கவுகாத்தியில் இருந்து அவர்கள் புறப்படும்போது, மனதளவில் அவர்கள் உயிருடன் இருக்கமாட்டார்கள். பற்ற வைத்து எரிந்து கொண்டிருக்கின்ற நெருப்பில் என்ன நடக்கும் என்பது அவர்களுக்கு தெரியும்.

அசாமில் இருந்த வந்து சேரும் ஆன்மாக்கள் இல்லாத உடல்கள் நேரடியாக பிரேத பரிசோதனைக்காக மராட்டிய சட்டசபைக்கு அனுப்பப்படும் என அவர் எச்சரிக்கை விடும் வகையில் கூறியுள்ளார். இதனால், மராட்டிய அரசியலில் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்