பெங்களூருவில் தொடர் கனமழை: ஏரி உடைந்து குடியிருப்பு பகுதியை வெள்ளம் சூழ்ந்தது

பெங்களூருவில் தொடர் கனமழைக்கு ஏரி உடைந்து குடியிருப்பு பகுதியை வெள்ளம் சூழ்ந்தது. அங்கு சிக்கிய மக்கள் டிராக்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர்.

Update: 2022-08-04 16:52 GMT

குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்து இருந்ததையும், மக்கள் டிராக்டர் மூலம் மீட்கப்பட்டதையும் படத்தில் காணலாம்.

பெங்களூரு:பெங்களூருவில் தொடர் கனமழைக்கு ஏரி உடைந்து குடியிருப்பு பகுதியை வெள்ளம் சூழ்ந்தது. அங்கு சிக்கிய மக்கள் டிராக்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர்.

குடியிருப்பை சூழ்ந்த வெள்ளம்

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் எடுத்து உள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் கடந்த 2 நாட்களாக இரவு, பகலில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழை காரணமாக பெங்களூருவில் உள்ள சாலைகள் குளங்களாக மாறி உள்ளன. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல்வேறு இடங்களில் சாலையில் மரங்கள் முறிந்து விழுந்து உள்ளன.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக சர்ஜாப்புரா ரோட்டில் உள்ள ஒரு ஏரி உடைந்தது. அந்த ஏரி தண்ணீர் அருகே இருந்த குடியிருப்பை சூழ்ந்தது. இதனால் அந்த குடியிருப்பில் வசித்து வரும் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வெளியே வர முடியாமல் வீட்டிற்குள் முடங்கினர். இதுபற்றி அறிந்ததும் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர்.

டிராக்டர்கள் மூலம் மீட்பு

பின்னர் டிராக்டர்கள் மூலம் குடியிருப்பில் சிக்கியவர்களை மாநகராட்சி அதிகாரிகள் வெளியே மீட்டு வந்தனர். இந்த நிலையில் அந்த குடியிருப்புக்குள் நுழையும் பகுதியின் முன்பு நின்று கொண்டு அங்கு வசித்து வந்தவர்கள் மாநகராட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தினர். மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால் தான் குடியிருப்புகளுக்குள் ஏரி தண்ணீர் புகுந்த விட்டதாக அவர்கள் குற்றச்சாட்டு கூறினர். மேலும் வரமகாலட்சுமி பண்டிகையை கொண்டாட முடியாத நிலைக்கு தங்களை மாநகராட்சி அதிகாரிகள் தள்ளிவிட்டதாகவும் கண்ணீர்மல்க கூறினர். அந்த குடியிருப்பை சூழ்ந்துள்ள தண்ணீரை மின்மோட்டார்கள் மூலம் அகற்றும் பணி நடந்து வருகிறது.

இதுதவிர பெங்களூரு கெங்கேரி தாவரகெரே சாலையில் ஒரு கார் பள்ளத்தில் சிக்கியது. இதுபோல பங்கலே கிராஸ் என்ற பகுதியிலும் ஒரு கார் சாலை பள்ளத்தில் சிக்கி கவிழ்ந்தது. அந்த காரின் டிரைவரை பொதுமக்கள் மீட்டனர். கொம்பகட்டாவில் உள்ள கெம்பேகவுடா லே-அவுட்டில் ஏரி தண்ணீர் புகுந்தது. அந்த தண்ணீரில் வந்த மீன்களை பொதுமக்கள் பிடித்தனர். ஒசூர் சாலையில் உள்ள ஹெப்பகோடி முக்கிய சாலையும் மழைநீரில் மூழ்கி உள்ளது. இதுபோல பெங்களூரு நகரின் பல சாலைகள் குளமாக காட்சி அளிக்கின்றன.

பள்ளி பஸ் கவிழ்ந்தது

ராமநகர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் கொம்மபயனதொட்டி என்ற கிராமத்தில் ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. கொடமாரனகுப்பே என்ற கிராமத்தில் ஏரி உடைந்து தண்ணீர் வெளியேறியது. இதனால் அந்த பகுதியில் இருந்த பாலம் மூழ்கியது. இதன்காரணமாக 5 கிராம இணைப்பு துண்டிக்கப்பட்டது. துமகூரு மாவட்டம் கொம்மதகேரி என்ற கிராமத்திலும் சீனிவாசப்பூர் என்ற ஏரி உடைந்து அதிகளவில் தண்ணீர் வெளியேறி வருகிறது. அந்த ஏரி அருகே உள்ள பாலம் தண்ணீரில் மூழ்கியது. அந்த பாலத்தை நேற்று ஒரு தனியார் பஸ் கடக்க முயன்றனர்.

ஆனால் பாலத்தின் நடுப்பகுதியில் சென்ற போது அந்த பஸ் திடீரென பழுதாகி நின்றது. இதனால் அந்த பஸ்சில் பயணித்த 50 பயணிகளை கிராம மக்கள் பத்திரமாக மீட்டனர். ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூரில் ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளுடன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். ஆனால் அவர் மின்கம்பத்தை பிடித்து உயிர் தப்பினார். ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகுர் தாலுகா சித்தாப்புரா என்ற கிராமத்தில் வெள்ளத்திற்கு நடுவில் ஒரு பள்ளி பஸ் பாலத்தை கடந்து சென்றது. அந்த பஸ்சில் 30 மாணவர்கள் இருந்தனர். அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. ராமநகர் மாவட்டம் மாகடி அருகே பெய்த கனமழையின் போது பள்ளி பஸ் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 20 மாணவர்கள் காயம் அடைந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்