பெங்களூரு மாநகராட்சி தேர்தல்: சுப்ரீம் கோா்ட்டில் இன்று விசாரணை நடக்கிறது - மேலும் கால அவகாசம் கோர மாநில அரசு முடிவு

பெங்களூரு மாநகராட்சி தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

Update: 2022-07-21 13:00 GMT

பெங்களூரு:

வார்டு மறுவரையறை பணிகள்

பெங்களூரு மாநகராட்சிக்கு தேர்தல் நடத்த உத்தரவிட கோரி கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மாநகராட்சி தேர்தலை நடத்தும்படி மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது. வார்டுகள் எண்ணிக்கை உயர்த்தப்பட்ட நிலையில், வார்டு மறுவரையறை பணிகள் நடைபெறுவதால் இப்போதைக்கு தேர்தல் நடத்த இயலாது என்று அரசு கூறியது. இதை சுப்ரீம் கோர்ட்டு ஏற்று கொண்டது.

இந்த நிலையில் சுப்ரிம் கோர்ட்டில் கடந்த மே மாதம் 20-ந் தேதி அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கர்நாடக அரசு 8 வாரங்களில் வார்டு மறுவரையறை பணிகளை முடித்து அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன் பிறகு அந்த அறிக்கை அடிப்படையில் ஒரு வாரத்தில் மாநகராட்சி தேர்தல் பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதைத்தொடர்ந்து இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 22-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நாளை விசாரணை

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் பெங்களூரு மாநகராட்சி தொடர்பான வழக்கு நாளை (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வருகிறது. அப்போது கர்நாடக அரசு சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர்கள், பெங்களூரு மாநகராட்சி வார்டு மறுவரையறை அரசாணையை தாக்கல் செய்ய உள்ளனர். ஆனால் இட ஒதுக்கீட்டு பட்டியலை மாநில அரசு இன்னும் வெளியிடவில்லை. இட ஒதுக்கீட்டு பட்டியலை வெளியிட்டால் தான் மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் பணிகளை தொடங்க முடியும்.

அதனால் இந்த இட ஒதுக்கீட்டு பட்டியலை வெளியிட காலஅவகாசம் வழங்குமாறு கோர கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால் மாநகராட்சி தேர்தல் மேலும் தள்ளிப்போக வாய்ப்புள்ளது. ஏனென்றால் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு உரிய ஆய்வு தகவல்கள் இல்லாமல் இட ஒதுக்கீடு வழங்க சுப்ரீம் கோா்ட்டு தடை விதித்துள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு நேற்று தனது அறிக்கையை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்