கால்வாய் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு சிறுமி சாவு

பத்ராவதி அருகே பத்ரா கால்வாய் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு சிறுமி உயிரிழந்தாள். அவள் தாயுடன் துணி துவைக்க சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

Update: 2023-03-11 06:45 GMT

சிவமொக்கா-

கால்வாயில் தவறி விழுந்தாள்

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா காளனகட்டே கிராமத்தை சேர்ந்தவள் ஷில்பா (வயது 12). இவள் நேற்று முன்தினம் தனது தாயுடன் அந்தப்பகுதியில் உள்ள பத்ரா கால்வாய்க்கு துணி துவைக்க சென்றாள். அப்போது அவளது தாய், கால்வாய் கரையில் அமர்ந்து துணி துவைத்து கொண்டிருந்தார். ஷில்பா, படிக்கரையில் நின்று தண்ணீரில் விளையாடி கொண்டிருந்தாள்.

அந்த சமயத்தில்எதிர்பாராதவிதமாக கால்வாய் படியில் படிந்திருந்த பாசியில் ஷில்பா மிதித்துள்ளார். இதனால் அவள் கால் வழுக்கி கால்வாயில் விழுந்தாள். கால்வாயில் அதிகளவு தண்ணீர் சென்றதால், ஷில்பா அடித்து செல்லப்பட்டாள். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவளது தாய், 'காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்..' என கூச்சலிட்டார்.

உயிரிழப்பு

இதனை கேட்ட அந்தப்பகுதியில் இருந்தவர்கள் விரைந்து வந்து சிறுமியை மீட்க முயன்றனர். ஆனாலும் அவர்களால் சிறுமியை மீட்க முடியவில்லை. இதுபற்றிய தகவல் அறிந்ததும் பத்ராவதி புறநகர் போலீசாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இரவு வரை சிறுமி கிடைக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று காலையும் தீயணைப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, சிறுமி தவறி விழுந்த இடத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு தடுப்பில் ஷில்பாவின் உடல் கிடந்தது. தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட ஷில்பா, நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து தீயணைப்பு படையினர் ஷில்பாவின் உடலை மீட்டனர்.

சோகம்

இதைத்தொடர்ந்து போலீசார் ஷில்பாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பத்ராவதி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்