ஆடம்பர காரில் ஒரு மாத காலம் உல்லாச பயணம்.. சிக்கிய ஆபத்தான விஐபி

ஆடம்பர காரில் யாருக்கும் தெரியாமல் ஒரு மாத காலத்திற்கும் மேலாக உல்லாச பயணம் செய்த ராஜநாகத்தை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-08-31 11:02 GMT

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் சுஜித். இவர் வேலை விஷயமாக கடந்த ஒரு மாதத்திற்கு முன், காரில் மலப்புரம், வழிக்கடவு சென்றார். அப்போது தான் ஒட்டி வந்த காரை அடர்ந்த காட்டு பகுதியில், சாலையோரம் நிறுத்தி விட்டு சென்றார்.

பின்னர் பணிகளை முடித்துவிட்டு திரும்பி வந்து பார்த்த போது அந்த காரினுள் ராஜநாகம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதை தொடர்ந்து அந்த பாம்பை பிடிக்க சுஜித் வனத்துறையினரின் உதவியை நாடினார். வனத்துறையினர் தேடும் போது பாம்பு தென்படவில்லை.

இந்த நிலையில் அந்த பாம்பு காரில் இருந்து காட்டுக்குள் தப்பி சென்று இருக்கலாம் என்று கருதிய வனத்துறையினர் காரை ஒட்டி செல்லுமாறு கூறிவிட்டு சென்று விட்டனர். அதை நம்பி சுஜித் காரை எடுத்துக்கொண்டு கோட்டயம் வந்தார்.

பின்னர் சந்தேகத்தின் பேரில் அந்த காரை சர்வீஸ் சென்டரில் கொடுத்து முற்றிலுமாக சர்வீஸ் செய்தார். ஆனாலும் அந்த பாம்பு தென்படவில்லை. இதை தொடர்ந்து ராஜ நாகம் போய்விட்டதாக கருதிய சுஜித் கடந்த ஒரு மாதத்தில், தனியாகவும் மனைவி குழந்தைகளுடனும் அந்த காரில் நூற்றுக்கணக்கான கி.மீ. தூரம் பயணம் மேற்கொண்டு உள்ளார்.

கடந்த 10 நாட்களுக்கு முன் காருக்குள் பாம்பின் சட்டை கழற்றப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்ததார். பின் பாம்பு பிடி மன்னன் வாவா சுரேஷை அழைத்து காரை முற்றிலுமாக பிரிசோதனை செய்தார். ஆனால் அந்த பாம்பை கண்டு பிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் சுஜித்தின் வீடு அருகே அந்த பாம்பு ஊர்ந்து செல்வதை கண்ட அக்கம் பக்கத்தை சேர்ந்த இருப்பிட வாசிகள் அந்த பாம்பை பத்திரமாக பிடிக்க வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த வனத்துறையினர் 8 அடி நீளமுள்ள அந்த ராஜ நாகத்தை பிடித்தனர். யாருக்கும் தெரியாமல் எந்த வித தீங்கும் விளைவிக்காமல் ஒரு மாதத்திற்கு மேலாக ஆடம்பர காரில் உல்லாச பயணம் செய்த அந்த ஆபத்தான விஐபி ராஜ நாகத்தை மீண்டும் வழிக்கடவு வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட வனத்துறையினர் முடிவு செய்து உள்ளனர்.

ஒரு மாதத்திற்கு மேலாக தனது காரில் ராஜ நாகம் பயணம் செய்ததை நினைத்து சுஜித் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் தவித்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்