காங்கிரசின் முதல் வேட்பாளர் பட்டியல் இந்த மாதம் வெளியாகும்; சித்தராமையா பேட்டி
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரசின் முதல் வேட்பாளர் பட்டியல் இந்த மாதம் வெளியாகும் என்று சித்தராமையா கூறியுள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா விஜயநகரில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
காங்கிரஸ் வேட்பாளர்கள்
கர்நாடகத்தில் காங்கிரசுக்கு ஆதரவான அலை வீசுகிறது. மேலும் எங்கள் கட்சி பலமாக உள்ளது. அதனால் தான் அதிகம் பேர், டிக்கெட் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் முதல் பட்டியல் இந்த மாதம் வெளியிடப்படும். ஜனார்த்தனரெட்டி புதிய கட்சியை தொடங்கியுள்ளார். ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்.
ஆனால் கட்சிகளை ஏற்பது குறித்து மக்கள் தான் முடிவு செய்வார்கள். இந்த கட்சியால் காங்கிரசுக்கு லாபம் என்று கூற முடியாது. நாங்கள் யாரையும் நம்பி இருக்கவில்லை. காங்கிரஸ் சொந்த பலத்தில் வெற்றி பெறும். அந்த பலத்தின் அடிப்படையில் நாங்கள் தேர்தலை எதிர்கொள்கிறோம்.
வெற்றி பெறுவோம்
100 சதவீதம் நாங்கள் வெற்றி பெறுவோம். முன்னாள் முதல்-மந்திரிகள் பங்காரப்பா, எடியூரப்பா போன்றவர்கள் தனி கட்சி தொடங்கினார்கள். அது என்ன ஆனது?. அது வரலாறாக உள்ளது. அதற்காக ஜனார்த்தனரெட்டியின் கட்சியை குறைத்து பேசவில்லை. ஜனநாயகத்தில் இறுதியில் மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.