அதிகாரி மாற்றத்தை தடுப்பதாக மத்திய அரசு மீது டெல்லி அரசு வழக்கு அடுத்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கே அதிகாரம் உண்டு என்று ஒருமனதாக கூறப்பட்டுள்ளது.

Update: 2023-05-12 21:15 GMT

புதுடெல்லி, 

டெல்லியில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற உயர் அதிகாரிகள் நியமனம், இடமாற்றம் தொடர்பான அதிகாரம் மாநில அரசுக்கா, மத்திய அரசுக்கா என்பது தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பில் பொது ஒழுங்கு, போலீஸ், நிலம் தவிர்த்து பிற எல்லாவற்றிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கே அதிகாரம் உண்டு என்று ஒருமனதாக கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பை அடுத்து சேவைகள் துறை செயலாளர் ஆசிஷ் மோரேயை நீக்கி விட்டு, அவரது இடத்தில் டெல்லி ஜல் வாரியத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஏ.கே.சிங்கை நியமித்து கெஜ்ரிவால் அரசு உத்தரவிட்டது.

ஆனால் இந்த உத்தரவை மத்திய அரசு செயல்படுத்தாமல் தடுப்பதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் டெல்லி அரசு நேற்று வழக்கு தொடுத்துள்ளது.

இது தொடர்பாக தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு முன் டெல்லி அரசின் சார்பில் மூத்த வக்கீல் ஏ.எம்.சிங்வி ஆஜராகி முறையிட்டார். டெல்லி அரசின் உத்தரவை மத்திய அரசு செயல்படுத்தாமல் தடுப்பது கோர்ட்டு அவமதிப்பு, இது குறித்து விசாரிக்க வேண்டும் என்று கூறினார்.

இது தொடர்பாக ஒரு அமர்வு அமைத்து அடுத்த வாரம் விசாரிக்கப்படும் என தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அறிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்