பா.ஜனதா ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரிக்க வேண்டும்-காங். எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை

40 சதவீத கமிஷன் உள்பட பா.ஜனதா ஆட்சியில் நடைபெற்ற அனைத்து ஊழல்கள் குறித்தும் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அரசுக்கு, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2023-06-25 18:45 GMT

பெங்களூரு:-

40 சதவீத கமிஷன் விவகாரம்

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமாரும் இருந்து வருகின்றனர். சட்டசபை தேர்தலுக்கு முன்பாக பா.ஜனதா ஆட்சியில் நடைபெற்றதாக கூறப்படும் 40 சதவீத கமிஷன், பிற ஊழல் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது.

மேலும் பா.ஜனதா ஆட்சியை போன்று ஊழல் இல்லாத நிர்வாகத்தை கொடுப்போம் என்றும் காங்கிரஸ் தலைவர்கள் கூறி இருந்தார்கள். இதையடுத்து, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் மந்திரிகளாக பதவி ஏற்றுக் கொண்ட எம்.பி.பட்டீல், பிரியங்க் கார்கே ஆகியோர் பா.ஜனதா ஆட்சியில் நடைபெற்ற அனைத்து ஊழல்கள் குறித்தும், ஒப்பந்ததாரர்களிடம் இருந்து 40 சதவீத கமிஷன் பெற்ற விவகாரம் குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்திருந்தனர்.

எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தல்

இந்த நிலையில், இந்த ஊழல் விவகாரத்தை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தற்போது கையில் எடுத்துள்ளனர். அதாவது பா.ஜனதா ஆட்சியில் நடைபெற்றதாக கூறப்படும் 40 சதவீத கமிஷன், சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு, கொரோனா சந்தர்ப்பத்தில் மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக கூறப்படுவது, பிட்காயின் முறைகேடு, கூட்டுறவு துறையில் நடந்த முறைகேடுகள், பிற அரசு பணிகளுக்கு நடைபெற்ற தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று அரசுக்கு, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்திற்கும் மேல் ஆகி விட்டது. ஆனால் இதுவரை பா.ஜனதா ஆட்சியில் நடைபெற்ற ஊழல், முறைகேடுகள் குறித்து இன்னும் அரசு விசாரணைக்கு உத்தரவிடவில்லை. அரசின் ஒரு துறை மட்டும் இல்லாமல் அனைத்து துறைகளிலும் பா.ஜனதா ஆட்சியில் ஊழல்கள் நடைபெற்றிருந்தது. அந்த ஊழல்கள் குறித்து உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தலில் பின்னடைவு

ஏனெனில் ஊழல் இல்லாத ஆட்சி நிர்வாகத்தை கொடுப்பதாக கூறிவிட்டு, பா.ஜனதா ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விசாரணைக்கு உத்தரவிடாமல் இருந்தால், நமது ஆட்சி மீது மக்களுக்கு நம்பிக்கை வராது. இது நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு பின்னடைவை கூட ஏற்படுத்தலாம். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 11 மாதங்களே இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலிலும் கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்றால், பா.ஜனதா ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் கூடுதல் டி.ஜி.பி. அம்ருத்பால் கைது செய்யப்பட்ட பின்பு, சி.ஐ.டி. போலீசார் விசாரணையை நிறுத்தி விட்டார்கள். சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் சம்பந்தப்பட்ட அரசியல் தலைவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது பற்றியும் தெரியவில்லை. எனவே காங்கிரஸ் அரசு பற்றி மக்களிடம் தவறான தகவல்கள் செல்லும் முன்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அரசை, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பாரபட்சம் இன்றி விசாரணை

இதுபோல், பிட்காயின் முறைகேட்டிலும் எந்த விதமான ஆதாரங்களும் இல்லை என்று பா.ஜனதாவினர் கூறி வந்தனர். அந்த முறைகேடு பற்றியும் விசாரிக்க வேண்டும். பா.ஜனதா ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும், இந்த விவகாரத்தில் சமரச அரசியல் செய்து கொள்வதற்கு அரசு இடம் அளிக்க கூடாது.

ஆட்சிக்கு வந்த ஓரிரு நாட்களில் பா.ஜனதா ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விசாரணை நடத்துவதாக கூறிவிட்டு, தற்போது ஒரு மாதம் ஆகியும் எந்த விதமான விசாரணைக்கும் உத்தரவிடாமல் இருப்பது சரியில்லை. எனவே பா.ஜனதா ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து எந்த விதமான பாரபட்சம், சமரசம் செய்து கொள்ளாமல் விசாதரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், முதல்-மந்திரி சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோரை வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்