ஏரியில் மூழ்கி தந்தை, மகன் சாவு
ஏரியில் மூழ்கி தந்தை மற்றும் மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொட்டப்பள்ளாப்புரா:-
பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டப்பள்ளாப்புரா சாந்திநகரை சேர்ந்தவர் புட்டராஜூ (வயது 42). இவரது மகன் கேசவ் (14). புட்டராஜூ பூ வியாபாரம் செய்து வந்தார். கர்நாடகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) வரலட்சுமி பூஜை பண்டிகை கோலாகலமாக கொண்டப்படுவதால் தாமரை பூக்களை விற்பனை செய்ய கிராமத்தில் உள்ள ஏரியில் சென்று பறிக்க முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் மாலை தந்தையும், மகனும் ஏரிக்கரைக்கு சென்றுள்ளனர். முதலில் கேசவ் ஏரியில் இறங்கி தாமரை பூக்கள் பறிக்க முயன்றுள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக அவன் நீரில் மூழ்கி தத்தளித்தான். இதை பார்த்த தந்தை புட்டராஜூ மகனை காப்பாற்ற ஏரியில் குதித்தார். ஆனால் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார்கள். இதற்கிடையே மற்றொரு பூ வியாபாரி அந்த ஏரிக்கு வந்த போது ஏரிக்கரையில் காலணிகள், செல்போன்கள் இருப்பதை பார்த்து தொட்டப்பள்ளாப்புரா போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் தீயணைப்பு வீரர்களுடன் வந்த போலீசார், ஏரியில் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது தான் புட்டராஜூ, கேசவ் உடல்கள் மீட்கப்பட்டது. அதன்பிறகுதான் தந்தை-மகன் பூப்பறிக்க வந்ததும், இதில் ஏரியில் மூழ்கிய மகனை காப்பாற்ற புட்டராஜூ முயன்றதும், ஆனால் இருவரும் நீரில் மூழ்கி பலியானதும் தெரியவந்தது. பின்னர் 2 பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது