காதல் திருமணம் செய்த புதுப்பெண் கடத்தல்; தந்தை உள்பட 20 பேர் மீது வழக்கு

பெங்களூருவில், காதல் திருமணம் செய்ய புதுப்பெண்ணை கடத்தி சென்ற தந்தை உள்பட 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Update: 2022-06-01 21:14 GMT

பெங்களூரு:

காதல் திருமணம்

பெங்களூரு புறநகர் மாவட்டம் டாபஸ்பேட்டையை சேர்ந்தவர் கங்காதர் (வயது 30). இவரது உறவினரான நாகராஜ் என்பவரின் மகள் சலஜா (25). இந்த நிலையில் கங்காதர், சலஜா இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதனால் அவர்கள் 2 பேரும் தீவிரமாக காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் சலஜாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. இந்த காதலுக்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் (மே) 25-ந் தேதி கங்காதரும், சலஜாவும் வீட்டில் இருந்து வெளியேறினர். பின்னர் ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதன்பின்னர் கங்காதர் தனது காதல் மனைவி சலஜாவுடன் பெங்களூரு பேடரஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட வித்யமன்ய நகரில் உள்ள தனது சகோதரி வீட்டில் வசித்தார். மேலும் கடந்த 30-ந் தேதி கங்காதரும், சலஜாவும் தங்களது திருமணத்தை பதிவு செய்து கொண்டனர்.

புதுப்பெண் கடத்தல்

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கங்காதரின் சகோதரி வீட்டிற்கு போலீசார் என கூறி 2 பேர் வந்தனர். இதனால் அவர்களை வீட்டிற்குள் அழைத்து வந்து கங்காதரின் சகோதரி பேசி கொண்டு இருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் அந்த வீட்டிற்குள் சலஜாவின் தந்தை நாகராஜ் உள்பட மேலும் 18 பேர் தடாலடியாக புகுந்தனர்.

இதன்பின்னர் 20 பேரும் சேர்ந்து கங்காதர், அவரது சகோதரி, சகோதரியின் கணவர் ஆகியோரை சரமாரியாக தாக்கினர். பின்னர் சலஜாவை தூக்கி கொண்டு காரில் ஏற்றி கடத்தி சென்று விட்டனர். இந்த நிலையில் தன்னை தாக்கியதோடு, காதல் மனைவியையும் கடத்தி சென்றதாக சலஜாவின் தந்தை நாகராஜ் உள்பட 20 பேர் மீது பேடரஹள்ளி போலீஸ் நிலையத்தில் கங்காதர் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் 20 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் கடத்தப்பட்ட சலஜா எங்கு உள்ளார் என்றும் போலீசார் தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்