குஜராத்தில் பயங்கர விபத்து: பஸ் பயணிகள் 6 பேர் பலி
குஜராத்தில் டிரெய்லர் வாகனம் மீது பஸ் மோதியதில் 6 பயணிகள் பலியானார்கள்.
வடோதரா,
ராஜஸ்தானில் இருந்து குஜராத் மாநிலம் சூரத் நோக்கி ஒரு சொகுசு பஸ் புறப்பட்டது.அந்த பஸ், குஜராத் மாநிலம் வடோதராவின் புறநகர் பகுதியில் ஆமதாபாத்-மும்பை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை சென்று கொண்டிருந்தது.
ஒரு பாலத்தில், முன்னால் சென்று கொண்டிருந்த டிரெய்லா் வாகனத்தை பஸ் முந்த முயன்றது. அந்த முயற்சி பலன் அளிக்காமல், டிரெய்லரின் பின்னால் பலமாக மோதியது. இந்த விபத்தில், பஸ் பயணிகள் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 17 பேர் காயமடைந்தனர். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
பலியானோரில் ஒரு பெண், ஒரு குழந்தை ஆகியோரும் அடங்குவர். 15 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.