ஒரே கட்டமாக தேர்தல்: தெலுங்கானாவில் 70.60 சதவீத வாக்குப்பதிவு

நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள், வாக்குப்பதிவு தொடங்கியதும் அமைதியாக தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றிவிட்டு சென்றனர்.

Update: 2023-11-30 21:00 GMT

கோப்புப்படம்

ஐதராபாத்,

பாரதிய ராஷ்டிர சமிதி ஆளும் தெலுங்கானாவின் சட்டசபை பதவிக்காலம் விரைவில் நிறைவடைகிறது. 119 இடங்களை கொண்ட மாநில சட்டசபைக்கு நவம்பர் 30-ந்தேதி (நேற்று) தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அங்கு ஆட்சியை கைப்பற்ற பாரதிய ராஷ்டிர சமிதி, காங்கிரஸ், பா.ஜனதா இடையே மும்முனை போட்டி ஏற்பட்டு உள்ளது. இந்த கட்சிகளின் சார்பில் தீவிர பிரசாரமும், வாக்கு சேகரிப்பும் களை கட்டியிருந்தன.

சுமார் 2 மாதங்களாக அனல் பறந்த இந்த தேர்தல் களத்தில் 2,290 வேட்பாளர்கள் மோதுகின்றனர். இவர்களது வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கும் இடத்தில் 3.26 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தேர்தல் கமிஷன் கூறியிருந்தது.

இவர்கள் வாக்களிப்பதற்காக மாநிலம் முழுவதும் 35,655 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த வாக்குச்சாவடிகளில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பல வாக்குச்சாவடிகளில் அதற்கு முன்னரே வாக்காளர்கள் அதிகமாக குவிந்திருந்தனர்.

நீண்ட வரிசையில் காத்திருந்த அவர்கள், வாக்குப்பதிவு தொடங்கியதும் அமைதியாக தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றிவிட்டு சென்றனர். இதனால் மாநிலம் முழுவதும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு காணப்பட்டது.

இந்த வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. அதேநேரம் நக்சலைட்டு ஆதிக்கம் நிறைந்த 13 தொகுதிகளில் மாலை 4 மணிக்கே வாக்குப்பதிவு முடிக்கப்பட்டது.

பல வாக்குச்சாவடிகளில் மாலையிலும் நீண்ட வரிசைகள் காணப்பட்டன. இதனால் 5 மணிக்கு முன்பு வந்தவர்களுக்கு மட்டும் டோக்கன் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டது. இந்த தேர்தலில் மாநிலம் முழுவதும் 63.94 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் பல வாக்குச்சாவடிகளில் 5 மணிக்கு பின்னரும் ஏராளமான வாக்காளர்கள் ஓட்டுப்போட்டதால், வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் மாநிலம் முழுவதும் 70.60 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. இறுதி வாக்கு எண்ணிக்கை பின்னர் தெரியவரும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

மாநிலம் முழுவதும் நேற்று வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் மூடி சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டன. அங்கு வருகிற 3-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்