ரெயில்வே வேலைக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கு லாலு மகன், மகள்கள் வீடு உள்பட 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

ரெயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாக பெற்ற வழக்கில், லாலு மகன், மகள்கள் வீடுகள் உள்பட 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

Update: 2023-03-10 22:15 GMT

பாட்னா, 

கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவ் ரெயில்வே மந்திரியாக இருந்தார். அப்போது, ரெயில்வேயில் குரூப் டி பணியிடங்களில் பாட்னாவை சேர்ந்த ஏராளமானோர் நியமிக்கப்பட்டனர்.

அதற்கு பதிலாக அவர்களிடம் இருந்து லாலு குடும்பத்தினர் மற்றும் நெருக்கமானவர்கள் நிலங்களை லஞ்சமாக பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, லாலுபிரசாத், அவருடைய மனைவி ராப்ரி தேவி, 2 மகள்கள் உள்பட 16 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

அவர்கள் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. வருகிற 15-ந் தேதி, அவர்கள் கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், கடந்த 6-ந் தேதி, பாட்னாவில் லாலுபிரசாத் யாதவின் மனைவி ராப்ரிதேவியிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. மறுநாள், டெல்லியில் லாலுவிடம் விசாரணை நடத்தியது.

சி.பி.ஐ. வழக்கு அடிப்படையில், சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கில், அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது. லாலுபிரசாத் யாதவின் மகனும், துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ், மகள்கள் ஹேமா, ராகினி, சாண்டா ஆகியோரின் டெல்லி வீடுகளிலும், ராஷ்டிரீய ஜனதாதள முன்னாள் எம்.எல்.ஏ. அபு டோசனா வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

பாட்னா, ராஞ்சி, மும்பை, நொய்டா, டெல்லி உள்பட பல நகரங்களில் லாலுவுக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான 15 இடங்களில் சோதனை நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்