விபத்தில் வாலிபர் சாவு: டேங்கர் லாரி டிரைவருக்கு 2 ஆண்டு சிறை
விபத்தில் வாலிபர் இறந்த வழக்கில் டேங்கர் லாரி டிரைவருக்கு 2 ஆண்டு சிறை விதித்து பத்ராவதி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
சிவமொக்கா-
சிவமொக்கா மாவட்டம் பத்ராவதியை சேர்ந்தவர் நடராஜ். டேங்கர் லாரி டிரைவர். இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ந்தேதி நடராஜ், டேங்கர் லாரியில் சிக்கமகளூரு மாவட்டம் கொப்பாவில் இருந்து பத்ராவதி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் பத்ராவதி அருகே வந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த மொபட் மீது லாரி மோதியது. இதில் மொபட்டில் சென்ற அர்ஜுனப்பா என்ற வாலிபர் சம்பவ இடத்திேலயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பத்ராவதி போலீசார்,
டேங்கர் லாரி டிரைவர் நடராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு பத்ராவதி கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று முன்தினம் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அப்போது, விபத்தில் வாலிபர் உயிரிழந்த வழக்கில் நடராஜிக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.