பள்ளி மாணவன் கொலையில் ஆசிரியர் கைது
கதக் அருகே, பள்ளி மாணவன் கொலையில் ஆசிரியர் கைது செய்யப்பட்டு உள்ளார். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
கதக்:
பள்ளி மாணவன் கொலை
கதக் மாவட்டம் நரகுந்தா தாலுகா ஹட்லி கிராமத்தை வசித்து வருபவர் கீதா (வயது 34). இவரது மகன் பரத் (9). இந்த சிறுவன் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் நேற்று முன்தினம் பரத்தை, பள்ளியில் பணியாற்றி வந்த கவுரவ ஆசிரியரான முத்தப்பா என்பவர் தாக்கியதோடு முதலாவது மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்தார்.
மேலும் கீதாவையும், ஆசிரியரான சங்கனகவுடாவை என்பவரையும் தாக்கிவிட்டு தலைமறைவானார். இந்த கொலை சம்பவம் குறித்து நரகுந்தா போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். மேலும் தலைமறைவாக இருந்த முத்தப்பாவை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று முத்தப்பாவை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.
தாய் மீதான கோபத்தில்...
அதாவது கடந்த ஆண்டு (2021) கீதாவும், முத்தப்பாவும் ஒரே நேரத்தில் பள்ளியில் கவுரவ ஆசிரியர்களாக பணிக்கு சேர்ந்து இருந்தனர். இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருந்தது. 2 பேரின் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு வாட்ஸ்-அப்பில் குறுந்தகவல் அனுப்பி வந்து உள்ளனர். இந்த நிலையில் கீதா, சங்கனகவுடாவிடமும் வாட்ஸ்-அப்பில் பேசி வந்ததாக தெரிகிறது.
இதுபற்றி அறிந்த முத்தப்பா, சங்கனகவுடாவிடம் பேச வேண்டாம் என்று கீதாவிடம் கூறியுள்ளார். ஆனால் இதனை ஏற்க கீதா மறுத்து விட்டார். இதனால் கீதா மீது கோபத்தில் இருந்த சங்கனகவுடா கீதாவின் மகன் பரத்தை கொலை செய்தது தெரியவந்து உள்ளது.