3 துணை முதல்-மந்திரி பதவிகளை உருவாக்குவது குறித்து பேசுவது தேவையற்றது-மந்திரி தினேஷ் குண்டுராவ் சொல்கிறார்
மேலும் 3 துணை முதல்-மந்திரி பதவிகளை உருவாக்குவது குறித்து பேசுவது தேவையற்றது என்றும், யாரும் இதுபற்றி பகிரங்கமாக கருத்து தெரிவிக்க கூடாது என்றும் மந்திரி தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:-
பெங்களூருவில் நேற்று சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டுராவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
பகிரங்கமாக தெரிவிக்க கூடாது
கர்நாடக மந்திரிசபையில் மேலும் 3 துணை முதல்-மந்திரி பதவிகளை உருவாக்க வேண்டும் என்று மந்திரி ராஜண்ணா கூறி இருக்கிறார். அரசியல் விவகாரங்கள் குறித்து யாரும் பகிரங்கமாக கருத்து தெரிவிக்க கூடாது. அதற்கான அவசியமும் இல்லை. முதல்-மந்திரி சித்தராமையா சிறப்பான முறையில் ஆட்சி நிர்வாகம் நடத்தி வருகிறார். அதே நேரத்தில் இன்னும் 3 துணை முதல்-மந்திரி பதவிகளை உருவாக்க வேண்டும் என்று மந்திரி ராஜண்ணா கூறிஇருப்பது கூட தேவையற்றது. காங்கிரஸ் கட்சி எப்போதும் அனைத்து சமூகம் மற்றும் சாதிகளை ஒன்றாகவே முன்னெடுத்து சென்று வருகிறது. காங்கிரஸ் கட்சி சார்பில் அனைத்து சமுதாயத்தையும் கவனத்தில் வைத்து கொண்டே அனைத்து திட்டங்களையும் தீட்டி அமல்படுத்துகிறோம்.
தலைமை முடிவு செய்யும்
காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை கூட ஏழைகள், தாழ்த்தப்பட்டோர், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே தயார் செய்திருந்தது. யார், எந்த பதவியில் இருக்க வேண்டும் என்பது குறித்து விவாதிப்பது தேவையற்றது.
அதிகார பகிர்வு, புதிய பதவிகளை உருவாக்குவது, யாருக்கு அந்த பதவியை வழங்க வேண்டும் என்பது குறித்து காங்கிரஸ் தலைமை முடிவு செய்யும். அதுபற்றி கட்சிக்குள் இருப்பவர்கள் பகிரங்கமாக பேசுவதோ, விவாதிப்பதோ தேவையற்றது.
இவ்வாறு அவர் கூறினார்.