பட்டாசுக்கு தடை விதித்த டெல்லி அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரிய வழக்கை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

பட்டாசுக்கு தடை விதித்த டெல்லி அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரிய வழக்கை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.

Update: 2022-10-13 17:45 GMT

பட்டாசுக்கு தடை

டெல்லியில் அனைத்து வகையான பட்டாசுகளின் உற்பத்தி, சேமிப்பு, விற்பனை மற்றும் பயன்பாடு முற்றிலும் தடை செய்யப்பட்டு உள்ளது.

இந்த முறை டெல்லியில் ஆன்லைன் பட்டாசு விற்பனை மற்றும் வினியோகத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு (2023) ஜனவரி 1-ந்தேதி வரை இந்த கட்டுப்பாடு அமலில் இருக்கும் என டெல்லி மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 14-ந்தேதி உத்தரவு பிறப்பித்தது.

ரத்து செய்ய...

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தனியார் பட்டாசு நிறுவனத்தின் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

அதில், கொரோனா சூழலை கருத்தில் கொண்டு தேசிய பசுமை தீர்ப்பாயம் பட்டாசு வெடிக்க ஒட்டு மொத்த தடை விதித்தது. கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தபட்ட நிலையில் மீண்டும் பட்டாசுக்கு தடை விதிப்பதில், அதுவும் தலைநகரில் காற்றின் தரக்குறியீடு நல்ல நிலையில் இருக்கும்போது எவ்வித அடிப்படையும் இல்லை, எனவே டெல்லி அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி யஷ்வந்த் வர்மா, இந்த தொடர்புடைய மனுக்கள் சுப்ரீம்கோர்ட்டில் நிலுவையில் உள்ளனவா? இந்த மனுவின் நோக்கம் என்ன? என்பது குறித்து விளக்கம் அளிக்க மனுதாரருக்கு உத்தரவிட்டு, மனு மீதான விசாரணையை அக்டோபர் 18-ந்தேதிக்கு தள்ளி வைத்தது.

அவசரமாக விசாரிக்க மறுப்பு

இதற்கிடையே பட்டாசு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தனியார் பட்டாசு நிறுவனம் சார்பில் ஆஜரான வக்கீல், 'டெல்லியில் பட்டாசுக்கு விதிக்கப்பட்ட ஒட்டுமொத்த தடைக்கு எதிரான மனு சுப்ரீம்கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால், தங்களது மனு விசாரிக்கப்படாமல் உள்ளது.

தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி வருகிறது என்பதால் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும்' என முறையிட்டார்.

இந்த முறையீட்டை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்டு், 'இந்த விவகாரத்தை டெல்லி ஐகோர்ட்டே விசாரிக்கட்டும், அதில் தலையிட மாட்டோம்' என தெரிவித்தது.

டெல்லியில் பட்டாசுக்கு விதிக்கப்பட்ட ஒட்டுமொத்த தடைக்கு எதிராக பா.ஜ.க. மனோஜ் திவாரி தாக்கல் மனுவை ஏற்கனவே நிலுவையில் உள்ள மனுக்களுடன் இணைத்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு கடந்த 11-ந் தேதி முடிவு செய்துள்ளது குறிப்பிடத்கக்கது.

Tags:    

மேலும் செய்திகள்