மணிப்பூரில் இணையதள சேவை முடக்கத்துக்கு எதிரான மனு அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
இரு சமூகத்தினருக்கும் இடையே கலவரம் மூண்டது. அதில், சுமார் 100 பேர் பலியானார்கள்.
புதுடெல்லி,
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், பெரும்பான்மையாக வசிக்கும் 'மெய்தி' இன மக்கள், பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனர். அதற்கு எதிராக கடந்த மாதம் 3-ந் தேதி பழங்குடியினர் நடத்திய பேரணியில் வன்முறை ஏற்பட்டது.
இரு சமூகத்தினருக்கும் இடையே கலவரம் மூண்டது. அதில், சுமார் 100 பேர் பலியானார்கள். அமைதியை நிலைநாட்ட 10 ஆயிரம் ராணுவம், துணை ராணுவம் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
வதந்தி பரப்பப்படுவதை தடுக்க மாநிலம் முழுவதும் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.
இதை எதிர்த்து, மணிப்பூரை சேர்ந்த வக்கீல் சொங்தம் விக்டர் சிங், வணிகர் மயேங்பம் ஜேம்ஸ் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தை அடுத்து இணையதள சேவை கடந்த மே 3-ந் தேதி தொடங்கி காலவரையற்று முடக்கப்பட்டுள்ளது. இதனால் மணிப்பூர் மாநில மக்கள் அச்சமடைந்துள்ளதுடன், உறவினர்கள், அலுவலக சக ஊழியர்களுடன் தொடர்பு கொள்ள முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. மேலும் வங்கி சேவைகளை பெற முடியாமலும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாமலும், அத்தியாவசிய பொருட்கள், மருந்து பொருட்களை பெற முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது. எனவே, மீண்டும் இணையதள சேவையை அனைத்து மாவட்டங்களிலும் வழங்க மணிப்பூர் மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை அவசரமாக விசாரிக்கக்கோரி, நேற்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அனிருதா போஸ், ராஜேஷ் பிந்தல் ஆகியோர் அடங்கிய கோடைகால விடுமுறை அமர்வு முன் முறையிடப்பட்டது.
முறையீட்டை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட்டு, ''இதே விவகாரத்தை ஐகோர்ட்டும் விசாரித்து வருகிறபோது, ஏன் அதே கோரிக்கையை வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய வேண்டும்? வழக்கமான அமர்விடம் முறையிடுங்கள்'' என்று கூறியது.